கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செங்குறிச்சி, சேந்தமங்கலம், ஆரியநத்தம், பெரியக்குப்பம், திம்மி ரெட்டிபாளையம், கூ.கள்ளக்குறிச்சி, கூட்டடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மரவள்ளி, வேர்கடலை மற்றும் அதிகளவில் உளுந்து பயிர் சாகுபடி செய்துள்ளனர்.
மேற்கண்ட பகுதிகளை ஒட்டிய வனச்சரகத்தில் உள்ள மான்,மயில், காட்டுப் பன்றி போன்றவைகள் உணவு தேடியும், தண்ணீர் தேடியும் விளை நிலப் பகுதிக்கு வந்து, விவசாயிகள் பயிரிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
ஆரிய நத்தம் ஊராட்சியைச் சேர்ந்த கிராமத்தில் மட்டும் 20 ஏக்கர் உளுந்து பயிரிடப்பட்ட செடிகளில் பெரும்பகுதியை மான்கள் உட்கொண்டு விட்டதாகக் கூறப்படுகிறது. மேற்குறிப்பிட்ட கிராமங்களில் சுமார் 100 ஏக்கர் வரை வன விலங்குகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். மாவட்ட ஆட்சியர் குறைகேட்பு கூட்டத்திலும், வனச்சரக அதிகாரிகளிடம் எத்தனையோ முறை இழப்பீடு கோரி விண்ணப்பம் அளித்தும், வனத்துறையினரும், வேளாண் துறையினரும் ஒருவரை ஒருவர் காரணம் காட்டி நிவாரணத் தொகையை வழங்காமல் கிடப்பில் போடுவதாக இப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
பயிர்கள் சேதம் குறிதது நேற்று முன்தினம் அகிலஇந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் மணிகண்டன், விவசாயிகள் மணிவேல், சேகர்,வீரன், ராமசாமி உள்ளிட்ட பலர் சந்தித்து ஆய்வு செய்துள்ளனர். அந்த ஆய்வறிக்கையை மாவட்ட ஆட்சிய ரிடம் மனு அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும்; தவறும்பட்சத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என மாவட்ட செயலாளர் எம்.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago