மின்சார வாரியத்துக்கு நிவர் புயலால் ரூ.64 கோடி இழப்பு அமைச்சர் தங்கமணி தகவல்

By செய்திப்பிரிவு

நிவர் புயலால் மின்சார வாரியத்துக்கு ரூ.64 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது, என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

தமிழக அரசு பிறப்பித்த 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்ற நாமக்கல் மாவட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் வெ.சரோஜா ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர். அப்போது அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தை தாக்கிய நிவர் புயலால் மின்சார வாரியத்துக்கு இதுவரை ரூ.64 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து புயல்களின் தாக்கம் இருப்பதால் அதுதொடர்பாக ஏற்படும் இழப்புகளை கணக்கிட வேண்டியது உள்ளது, என்றார்.

மின் கம்பி அறுந்து விழுந்ததால் கல்லூரி மாணவி பாதிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, பள்ளிபாளையத்தில் மின் கம்பி அறுந்து விழுந்து கல்லூரி மாணவி பாதிக்கப்படவில்லை. அவர் செல்பேசியில் பேசிக்கொண்டிருந்தபோது கைப்பட்டதால் மின்சாரம் தாக்கி உள்ளது. அதனால் தான் அவர் படுகாயம் அடைந்தார்.

அவருக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டுள்ளன. மின்சார வாரியம் மூலமும் நிதியுதவி ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும், என அமைச்சர் தங்கமணி கூறினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ், சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி பாஸ்கர், முதன்மைக் கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்