மழைக்கால பாதிப்பு குறித்து தெரிவிக்க ஈரோடு மின்வாரியம் உதவி எண்கள் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டத்தில் மழைக் காலங்களில் மின் கம்பம் சாய்ந்து விழுந்தாலோ, மின் கம்பி அறுந்து விழுந்தாலோ தகவல் தெரிவிக்க உதவி எண்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொதுமக்கள் தங்கள் வீடுகளில், ஐ.எஸ்.ஐ.முத்திரை பெற்ற தரமான மின்சார சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேபிள் டி.வி ஒயர்களை மின்சார மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லக் கூடாது. ஒவ்வொரு வீட்டிற்கும், சரியான நில இணைப்பு (எர்த் பைப்) போடுவதுடன், அதனைக் குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில் அமைத்து பராமரிக்க வேண்டும்.

மின்சார கம்பத்திற்காக போடப்பட்டுள்ள ஸ்டே ஒயர் அல்லது மின் கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காய வைக்கக் கூடாது. குளியலறையிலும், கழிப்பறையிலும் ஈரமான இடங்களில் சுவிட்சுகளைப் பொருத்தக் கூடாது. சுவற்றின் உள்பகுதியில் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் ஒயர்களுடன் கூடிய பி.வி.சி.பைப்புகள் பதிக்கப் பட்டிருந்தால், அப்பகுதிகளில் ஆணி அடிப்பதை தவிர்க்க வேண்டும்.

மின் கம்பத்திலோ அவற்றைத் தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளைக் கட்டக் கூடாது. மின் கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்தக்கூடாது. அதன் மீது விளம்பர பலகைகளை கட்டக்கூடாது. மழைக் காலங்களில் மின்மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வுப் பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் ஆகியவற்றின் அருகே செல்லக்கூடாது.

மழையாலும், பெருங்காற்றாலும் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகே செல்லக் கூடாது.

மின்சாரத்தினால் தீ விபத்து ஏற்படுமாயின் அதனை தண்ணீர் கொண்டு அணைக்கக் கூடாது. உலர்ந்த மணல், கம்பளி கொண்டு தீயை அணைக்கலாம். இடி அல்லது மின்னலின் போது வெட்ட வெளியில் இருக்கக் கூடாது. அப்போது, டிவி, மிக்ஸி, கிரைண்டர், கணினி மற்றம் தொலைபேசிகளை பயன்படுத்த வேண்டாம்.

ஈரோடு மாவட்டத்தில் மழைக் காலங்களில் மின் கம்பம் சாய்ந்து விழுந்தாலோ, மின் கம்பி அறுந்து விழுந்தாலோ மற்றும் மின் வாரிய தொடர்பான தகவலுக்கு 9445857205, 9445857206, 9445857207, 9445857208 மற்றும் 9445851912 வாட்ஸ் அப் எண்ணுக்கு புகார்களை புகைப்படத்துடன் சேர்த்து தெரிவிக்கலாம், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்