சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிட தயாராகும் மதிமுக

By செய்திப்பிரிவு

திமுக கூட்டணியில் மண்ணச்ச நல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியை கேட்டுப்பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில், இத்தொகுதியில் மதிமுகவினர் இப்போதே தேர்தல் களப் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,14,456 ஆண்கள், 1,21,751 பெண்கள், 29 மூன்றாம் பாலினத்தவர் என 2,36,236 வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த பரமேஸ்வரி உள்ளார். இந்நிலையில், வரக்கூடிய தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் இத்தொகுதியில் போட்டியிட மதிமுக ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக தொகுதி முழுவதும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், தெருமுனை பிரச்சாரம், பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பணிகளில் மதிமுக நிர்வாகிகள் தற்போது சுறுசுறுப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார் தலைமையில் திருப்பைஞ்ஞீலியில் அண்மையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் டி.டி.சி.சேரன், அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் மைக்கேல்ராஜ், ஒன்றியச் செயலாளர்கள் அன்புச்செல்வன்(மேற்கு), செல்வேந்திரன்(வடக்கு) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் வாக்குச்சாவடி பணிக்குழு, ஒவ்வொரு கிராமத்துக்கும் தலா 20 இளைஞர்கள் அடங்கிய தேர்தல் பணிக்குழு, தலா 3 ஊராட்சிகளுக்கு 5 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு, ஒன்றிய அளவில் 5 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு அமைத்து, தேர்தல் பிரச்சாரப் பணிகளை வேகப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், கிராமங்கள்தோறும் கட்சிக் கொடி ஏற்றுதல், வீடுவீடாகச் சென்று மக்களை சந்தித்தல் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் திட்டமிடப்பட்டது. இதேபோல, மண்ணச்சநல்லூர் தொகுதிக்குட் பட்ட முசிறி தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஏவூரில் கடந்த 30-ம் தேதி நடத்தப்பட்டுள்ளது.

மண்ணச்சநல்லூர் தொகுதியில் தேர்தல் பணிகளை திடீரென முடுக்கி விட்டுள்ளது குறித்து மதிமுக நிர்வாகிகளிடம் கேட்ட போது, “மதிமுக போட்டியிட்டு வெற்றி பெற ஏதுவான தொகுதி யாக மண்ணச்சநல்லூர் விளங்கு கிறது. எங்கள் கூட்டணியில் திமுகவை தவிர வேறு எந்த கட்சியும் இத்தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டுவ தாக தெரியவில்லை. எனவே, திமுகவிடம் பேசி இத்தொகுதி யைப் பெறும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதிமுகவின் புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளராக உள்ள டி.டி.சி.சேரன் ஏற் கெனவே இப்பகுதியில் மாவட்ட கவுன்சிலராக வெற்றி பெற்றிருந்தவர் என்பதாலும், தொகுதியின் அனைத்து ஊர்களிலும் கிளைக் கழகம் இருப்பதாலும் இங்கு மதிமுக வால் வெற்றி பெற முடியும் என நம்புகிறோம். திமுக கூட்டணியில் நிச்சயம் இத்தொகுதி எங்களுக்கு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், இப்போதே தேர்தல் களப்பணியை தொடங்கி விட்டோம்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்