திருவண்ணாமலையில் பட்டப் பகலில் பைனான்சியர் வெட்டி கொலை அதிமுக செயலாளர் கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலையில் பட்டப் பகலில் பைனான்சியர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

தி.மலை நகரம் காந்திநகர் முதல் தெருவில் வசித்தவர் பாபு(45). இவர், காந்தி நகர் பழைய புறவழிச்சாலையில் உள்ள தேநீர் கடைக்கு நேற்று காலை 11.30 மணியளவில் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த 4 பேர், அவரை சுற்றி வளைத்து வெட்டிக் கொலை செய்தனர். இதை பார்த்த பொதுமக்கள் அலறி யடித்து ஓடினர். பின்னர், இரு சக்கர வாகனத்தில் 4 பேரும் தப்பிச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தி.மலை காவல் துறையினர், கொலை செய்யப்பட்ட பாபுவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தி. மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து குறித்து காவல் துறையினர் கூறும்போது, “வட்டித் தொழிலில் ஈடுபட்டு வந்த பாபு, ரியல் எஸ்டேட் மற்றும் கட்டப் பஞ்சாயத்திலும் ஈடுபட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட தொழில் போட்டி மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை கிரையம் செய்து கொள்வதில் ஏற்பட்ட பிரச்சினையில், அதிமுக நகர முன்னாள் செயலாளர் கனகராஜுடன் மோதல் உருவானது. இதன் எதிரொலி யாக, தி.மலை அண்ணாமலையார் கோயில் திருமஞ்சண கோபுரம் அருகே கடந்த மூன்றரை ஆண்டு களுக்கு முன்பு கனகராஜியை, பாபு உட்பட 3 பேர் வெட்டி கொலை செய்தனர்.

இந்த வழக்கில், அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்தனர். அதன்பிறகு, பாபு தலைமையில் ஒரு கும்பல் செயல்பட்டு வந்தது. அக்கும்பல் வட்டிக்கு பணம் கொடுத்தல் மற்றும் கட்டப் பஞ்சாயத்திலும் ஈடுபட்டது.

இந்நிலையில், பாபுவை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொன்றுள்ளது. அவர்கள், அனை வரும் முகக்கவசம் அணிந்து வந்துள்ளனர். 2 இரு சக்கர வாகனங்களில் வந்த கும்பல், ஒரு வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு, மற்றொரு இரு சக்கர வாகனத்தில் தப்பித்து சென்றுள்ளனர். அவர்கள், கூலிப்படையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக் கிறோம். அதிமுக நகர முன்னாள் செயலாளர் கனகராஜ் கொலைக்கு பழி தீர்க்கும் வகையில் கொலை நடைபெற்றுள்ளதா?, அல்லது வேறு காரணமா? என தெரியவில்லை. கொலை நடை பெற்றுள்ள இடத்தில் உள்ள கண் காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை நடைபெறுகிறது” என்றனர்.

இதுகுறித்து தி.மலை கிழக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இதற்கிடையில், கொலையாளிகள் தப்பித்து செல்வதை செல்போனில் படம் பிடித்தவர்கள், அந்த காட்சிகளை காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்