விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை கோவை, திருப்பூரில் மா.கம்யூ. கட்சியினர் கைது

By செய்திப்பிரிவு

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், இச்சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தியும் கோவை, திருப்பூரில் மத்திய அரசு அலுவலகங்களை நேற்று முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று மாநிலக் குழு உறுப்பினர் சி.பத்மநாபன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் அப்புறப்படுத்த முயன்றனர். இதனால், அங்குள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தை கட்சியினர் முற்றுகையிட முயன்றபோது, காவல் துறையினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடையை மீறி பிஎஸ்என்எல் அலுவலகத்துக்குள் நுழைந்த கட்சியினர், தரையில் அமர்ந்து கோஷமெழுப்பினர். இதையடுத்து, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல, திருப்பூரில் ரயில் நிலையம் எதிரில் உள்ள தலைமை அஞ்சலகம் முன் சிஐடியு மாவட்டத் தலைவர் உன்னிகிருஷ்ணன் தலைமையில் திரண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல, ஊத்துக்குளி ஆர்.எஸ். பிஎஸ்என்எல் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் ஆர்.குமார் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, போராட்டம் முடிவுக்கு வந்தது. அவிநாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஏர் கலப்பையுடன் ஊர்வலமாக வந்து, அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்