கீழ்பவானி வாய்க்காலை கான்கிரீட் கால்வாயாக மாற்ற விவசாயிகள் எதிர்ப்பு நிலத்தடி நீர் செரிவூட்டுதல் பாதிக்கும் என குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

கீழ்பவானி மண் கால்வாய், கான்கிரீட் கால்வாயாக மாற்றப்பட்டால், நிலத்தடி நீர் செரிவூட்டுதல் நின்று போகும் என்பதால் இந்த திட்டத்தை அரசு கைவிட வேண்டுமென பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழ்பவானி பாசனக் கால்வாயை, கான்கிரீட் கால்வாயாக மாற்றும் திட்டம் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் கே.வெங்கடாசலம் தலைமையில் ஈரோட்டில் நேற்று நடந்தது. கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கத் தலைவர் செ.நல்லசாமி, செயலாளர்கள் த.கனகராஜ், மு.ரவி, ஏ.கே.சுப்பிரமணியம், ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவர் ஈ.வீ.கே.சண்முகம், இயற்கை வாழ்வுரிமை இயக்க அமைப்பாளர் மே.கு. பொடாரன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

மண்ணால் ஆன கீழ்பவானி கால்வாய் மூலம் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறுகின்றன. இதில் ஒரு நேரத்தில் ஒரு லட்சத்து 3500 ஏக்கருக்கு மட்டும் தண்ணீர் விடும் அளவிற்கு கால்வாய் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு பகுதி நிலம் நேரடிப்பாசனம் பெறும்போது, நீர் விடப்படாத மற்ற பாசன நிலங்களில் உள்ள கிணறுகளுக்கு நீர் கிடைத்து விடுகிறது. இதனால், ஒரு லட்சத்து 3500 ஏக்கர் மறைமுகப் பாசனம் பெறுகிறது.

இதுபோக 38 உரம்பு நீர் பாசனம் மூலம் 50 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறுகிறது. தலைமைக் கால்வாய்க்கு வலதுபுறம் தடை செய்யப்பட்ட தூரத்திற்கு அப்பால் கிணறுகள் வெட்டி 60 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறுகின்றன. இதிலிருந்து வடியும் நீர் கொடிவேரிப் பாசனத்துக்கும், காலிங்கராயன் பாசனத்துக்கும், காவிரியிலும் கலந்து பாசன நீராகப் பயன்படுத்தப்படுகிறது. கால்வாயில் திறக்கப்படும் நீர் வீணாகக் கடலுக்கு செல்வதில்லை.

கடந்த 2013-ல் இந்தக் கால்வாயை கான்கிரீட் கால்வாயாக மாற்றுவதற்கு அரசு திட்டமிட்டது. பாசனப் பயனாளிகளில் எதிர்ப்பு மற்றும் எழுச்சி காரணமாக இந்த திட்டம் கைவிடப்பட்டது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு கான்கிரீட் என்று குறிப்பிடாமல் விரிவாக்குதல், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்துதல் என்ற பெயரில் ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது.

பிஏபி திட்டத்திலும், முல்லை பெரியார் திட்டத்திலும் அமைக்கப்பட்ட கான்கிரீட் கால்வாய் திட்டம் வெற்றிபெறவில்லை. எனவே, கீழ்பவானித்திட்ட கால்வாயை கான்கிரீட் கால்வாயாக மாற்றினால் நீர் செரிவூட்டுவது நின்றுபோய், திட்டத்தின் நோக்கம் பாழ்பட்டுப்போகும். பணம் வீணாகும். எனவே, பாசனப் பயனாளிகளுடைய எதிர்ப்பை உணர்ந்து, கீழ்பவானி கால்வாயை கான்கிரீட் கால்வாயாக மாற்றும் பணியை அரசு கைவிட வேண்டும், எனத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்