தேசிய பேரிடர் மீட்புக்குழு நெல்லை வருகை தாமிரபரணியில் குளிக்க 2 நாட்களுக்கு தடை

By செய்திப்பிரிவு

தென் மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் திருநெல்வேலி வந்தனர். தாமிரபரணி ஆற்றில் குளிக்க 2 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

புரெவி புயல் தென்மாவட்ட கடற்பகுதியில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரக்கோணம் பட்டாலியனில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் துணை கமாண்டன்ட் வைத்தியலிங்கம் தலைமையில் திருநெல்வேலி வந்துள்ளனர். ஒரு குழுவுக்கு 20 பேர் வீதம் 3 குழுவினர் வந்துள்ளனர். அவர்கள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் தங்கியுள்ளனர்.

துணை கமாண்டன்ட் வைத்தியலிங்கம் கூறும்போது, “வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கு தேவையான மீட்பு படகுகள், சாலைகளில் விழும் மரங் களை வெட்டி அகற்றுவதற்கான உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன” என்றார்.

ஆற்றில் குளிக்க தடை

திருநெல்வேலி ஆட்சியர் விஷ்ணு செய்தியாளர்களிடம் கூறும்போது, “திருநெல்வேலி மாவட்டத்தில் 87 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. ஒரு தாலுகாவுக்கு ஒரு துணை ஆட்சியர் நியமிக்கப்பட்டு, கண்காணிப்பு மேற் கொள்ளப்படுகிறது. கனமழை, வெள்ளம் காரணமாக யாரும் தாமிரபரணி ஆற்றில் அடுத்த 2 நாட்களுக்கு குளிக்கச் செல்ல வேண்டாம். பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு, வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு ஆகிய 6 அணைகளும் கண்காணிக்கப்படுகின்றன. வருவாய்த் துறை, வனத்துறை, நகராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவினர் மாஞ்சோலை மலைப்பகுதியை கண்காணிக்கின்றனர். திருநெல் வேலி, பாளையங்கோட்டை பகுதிகளில் தேங்கும் மழை நீரை வெளியேற்ற ராட்சத மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளன. குளங்களில் உடைப்பு ஏற்பட்டால், அவற்றை அடைக்க மணல் மூட்டைகள் தயாராக உள்ளன.

திருநெல்வேலிக்கு வந்துள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினருடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளுக்கு செல்ல இவர்கள் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களைத் தவிர மாநில பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த 60 பேரும், போலீஸாரும், தீயணைப்பு படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.

மாவட்டத்தில் கடலோர கிராமங்களில் இருந்து மீனவர் கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல 2 நாட்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. கடலோர கிராமங்கள் முழுவதும் கண்காணிப்பில் உள்ளன. மீனவர்களை தங்கவைக்க 7 பல்நோக்கு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மீனவர்கள் செல்லவில்லை என்றார் அவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்