திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிக்கை: புரெவி புயலால் திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யலாம் என்று, வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதிதீவிரமான வேகத்துடன் வீசும் புயல் காற்றிலிருந்து தென்னை மரங்களை பாதுகாப்பது அவசியம். நல்ல காய்ப்பு உள்ள தென்னந்தோப்புகளில் முதிர்ச்சியடைந்த அல்லது முதிர்ச்சியடையும் தருவாயில் உள்ள இளநீர் காய்களை பலத்த காற்று வீசத் தொடங்குவதற்குள் வெட்டி எடுக்க வேண்டும்.
தென்னை மரங்களில் தலைப் பகுதியின் அடிப்பாகத்தில் அதிக எடையுடன் காணப்படும் ஓலைகளை வெட்டி அகற்ற வேண்டும். இவ்வாறு செய்வதால் தென்னை மரங்களில் தலைப்பகுதியின் எடை குறைந்து, வேகமாக வீசும் காற்று தென்னை மரங்களின் தலைப்பகுதிகளை எளிதாக கடக்க முடியும். தென்னை மரங்களை பாதிப்பிலிருந்து காக்க முடியும். வாய்ப்புள்ள இடங்களில் தென்னை மரங்களின் அடிப்பகுதியை உயரமாக மண்ணால் அணைக்க வேண்டும். இதனால், மரங்களுக்கு கூடுதல் பலம் கிடைக்கும்.
மேலும் தென்னை மரங்களுக்கு நீர் பாய்ச்சுவதையும், உரமிடுவதையும் தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும். இதனால், வேர்ப்பகுதி நன்கு இறுகி பாதிக்கப்படாமல் காற்றின் வேகத்தை தாங்கி நிற்கும். திருநெல் வேலி மாவட்டத்தில் ராதாபுரம் மற்றும் வள்ளியூர் பகுதி விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் தென்னை மரங்களை சாகுபடி செய்துள்ளதால், இந்த வழிமுறைகளை உடனடியாக பின்பற்றி தென்னை மரங்களை காத்துக்கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago