செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ‘கற்போம் எழுதுவோம்' திட்டத்தின்கீழ் 25,827 பேருக்கு அடிப்படை கல்வி வழங்க நேற்று பயிற்சி வகுப்பு தொடங்கியது.
தமிழகத்தில் 2011-ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி 40,50,303 ஆண்கள், 83,80,226 பெண்கள் என 1,24,30,529 பேர் அடிப்படை கல்வி அறிவு இல்லாதவர்கள் என தெரியவந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரகம் சார்பில், 15 வயதுக்கு மேலான எழுத,படிக்கத் தெரியாதோர் நலன் கருதி, ‘கற்போம் எழுதுவோம்’ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது.
இத்திட்டம் குறித்து, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் முதன்மை கல்வி அலுவலர்களான ஏஞ்சலோ இருதயசாமி, சாமி. சத்தியமூர்த்தி, வெற்றிச்செல்வி ஆகியோர் தெரிவித்ததாவது: ‘கற்போம் எழுதுவோம்'- வயது வந்தோர் புதிய கல்வி திட்டம்,காஞ்சி. செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை மையங்களாக கொண்டு செயல்படுகிறது. இதில் தினமும், 2 மணி நேரம் கற்பித்தல் பணி நடைபெறும்.
இதன் வாயிலாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 13,176 பேருக்கு அடிப்படைக் கல்வி அளிக்கப்பட உள்ளது.இக்கல்வியை 13 ஊராட்சி ஒன்றியங்களில் நியமிக்கப்பட்டுள்ள 669 தன்னார்வலர்கள் அளிக்க உள்ளனர். அதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் 12,651 பேருக்குஅடிப்படை கல்வி வழங்கப்பட உள்ளது.14 ஊராட்சி ஒன்றியங்களில் நியமிக்கப்பட்டுள்ள 634 தன்னார்வலர்கள் கல்வி கற்பிக்க உள்ளனர் என்று தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago