பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மக்கள் குறைதீர்வுக் கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் ஆசிரியர்கள் நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 இடங்களில் மக்கள் குறைதீர்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, கல்விக்கடன், வேலை வாய்ப்பு, மின் இணைப்பு, வீட்டு மனை பட்டா, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட 780 பொதுநல மனுக்களை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் பொதுமக்களிடம் இருந்து பெற்றார். இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசு அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளியில் பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வரும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், ‘‘கடந்த 2011-ம் ஆண்டு தமிழக அரசு பள்ளிகளில் உடற்கல்வி, தையல், தோட்டக்கலை, வாழ்வியல், கணினி, கட்டிடக்கலை, ஓவியம், இசை, திறன் கல்வி உள்ளிட்ட பாடத்திட்டங்களுக்கு பகுதி நேர ஆசிரியர்களாக மாநிலம் முழுவதும் சுமார் 12 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டோம்.
இதுவரை எங்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. சுமார் 9 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வரும் எங்களை பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.
வாணியம்பாடி அடுத்த வெள் ளக்குட்டை காந்திநகர் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அளித்த மனுவில், ‘‘வாணியம்பாடி, வெள்ளக்குட்டை, காந்தி நகர் பகுதியில் அரசுக்கு சொந்தமான காலி இடத்தில் சுமார் 50 குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மனு அளித்து வருகிறோம். எனவே, எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.
இதேபோல, நாட்றாம்பள்ளி, ஆலங்காயம், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பகுதிகளில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வுக்கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்நிகழ்ச்சியில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 18 பேருக்கு மாதாந்திர உதவித்தொகை, ஆதரவற்ற விதவைச்சான்றிதழ் 7 பேருக்கு, சிறு-குறு விவசாயிகள் 20 பேருக்கு சான்று, வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் 10 விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், சார் ஆட்சியர் வந்தனாகர்க், ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் வில்சன்ராஜசேகர், வாணியம் பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரிசுப்பிரமணி, துணை ஆட்சியர்கள் அப்துல்முனீர், சரஸ்வதி, லட்சுமி, பூங்கொடி, வட்டாட்சியர் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago