போலி ஆவணங்கள் கொடுத்து, வங்கியில் கார் கடன் பெற்ற தம்பதியை ஈரோடு போலீஸார் கைது செய்தனர்.
ஈரோடு புதிய ஆசிரியர் காலனியைச் சேர்ந்தவர் கார்த்திக் (40). அவரது மனைவி ராதிகா (38). கடந்த மாதம் 13-ம் தேதி ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள ஒரு வங்கிக்குச் சென்று கார்த்திக் புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கினார். தனியார் காப்பீடு நிறுவன மேலாளராகப் பணிபுரியும் தன் மனைவி ராதிகா கார் வாங்க கடன் கேட்டு, அதற்கான ஆவணங்களைக் கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கோவையில் உள்ள கார் ஷோருமில், தனது கணவர் பெயரில் காரினை ராதிகா வாங்கியுள்ளார். இதற்கென வங்கி நிர்வாகம் ரூ.19 லட்சம் கடன் தொகையை வழங்கியுள்ளது.
காரின் பதிவு புத்தகத்தை வங்கி நிர்வாகம் கேட்டபோது, கார் வாங்கியதில் மோசடி நடந்துள்ளது தெரியவந்தது. மேலும், கடன் பெற ராதிகா கொடுத்த ஆவணங்கள் போலியானது என்றும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து வங்கி மேலாளர் கொடுத்த புகாரின்பேரில், கார்த்திக், ராதிகா ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago