டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க என்எஸ்எஸ் மாணவர்கள் தேர்வு முகாம்

ஜனவரி 26-ம் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் தென் மண்டலத்திலிருந்து கலந்து கொள்ளும் என்எஸ்எஸ் மாணவர் களை தேர்வு செய்வதற்கான முகாம் திருச்சி தேசியக் கல்லூரி யில் அண்மையில் தொடங்கியது.

டிச.8-ம் தேதி வரை நடைபெறும் இந்த முகாமில் தென்மண்டலத்துக்குட்பட்ட தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, அந்தமான் நிகோபார் மற்றும் லட்சத்தீவுகள் ஆகியவற்றிலிருந்து 200 என்எஸ்எஸ் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களில் 44 மாணவர்கள் மத்திய அரசின் குழு மூலம் தேர்வு செய்யப்பட்டு குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க உள்ளனர். இவர்களை தேர்வு செய்வதற்காக டெல்லியில் இருந்து குழு டிச.6-ம் தேதி திருச்சி வருகை தர உள்ளது.

இந்த தேர்வுக்கான முகாம் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஆர்.சுந்தர்ராமன் தலைமை வகித்தார். என்எஸ்எஸ்-ன் தமிழக, புதுச்சேரி பிராந்திய இயக்குநர் சி.சாமுவேல் செல்லையா முகாம் குறித்துப் பேசினார். மாநில என்எஸ்எஸ் அலுவலர் எம்.செந்தில்குமார், பாரதிதாசன் பல்கலைக்கழக என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் லட்சுமி பிரபா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பி.மணிசங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில், மலைக்கோட்டையிலிருந்து செங்கோட்டைக்கு என்ற நூல் வெளியிடப்பட்டது. முன்னதாக முகாம் ஒருங்கிணைப்பாளரும், கல்லூரி துணை முதல்வருமான டி.பிரசன்ன பாலாஜி வரவேற்றார். உடற்கல்வியியல் துறை உதவிப் பேராசிரியர் டி.பூபதி நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்