ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நிறைவு திருச்சி காந்தி மார்க்கெட்டில் இன்று முதல் கடைகள் செயல்படும்

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு கடந்த மார்ச் 30-ம் தேதி முதல் காந்தி மார்க்கெட் மூடப்பட்டது. மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு தனித்தனியே இடங்கள் ஒதுக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வந்தது.

இதனிடையே, காந்தி மார்க்கெட்டை நிரந்தரமாக மூடி விட்டு அங்குள்ள கடைகளை கள்ளிக்குடியில் கட்டப்பட்டுள்ள மத்திய வணிக வளாகத்துக்கு மாற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், காந்தி மார்க்கெட்டை திறக்க தடை விதிக்கப்பட்டது. தடையை நீக்க வேண்டும் என வியாபாரிகள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், காந்தி மார்க்கெட்டை தற்காலிகமாக திறக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து காந்தி மார்க்கெட் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.

ஏறத்தாழ 8 மாதங்களாக பூட்டப்பட்டிருந்த மார்க்கெட்டில் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு மார்க்கெட்டை சுற்றியுள்ள பகுதியில் உள்ள கடைகள் முன்பு செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து, நேற்று மார்க்கெட் வளாகத்துக்குள் ஒவ்வொரு கடைக்கு முன்புறமும் ஏறத்தாழ 10 அடி நீளத்துக்கு மேலாக செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி லாரிகளில் ஏற்றி அப்புறப்படுத்தினர்.

இந்த பணியை மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு நேற்று நேரில் பார்வையிட்டு, ஆலோசனைகளை வழங்கினார். தூய்மைப் பணி மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி முடிவடைந்ததால், காந்தி மார்க்கெட்டில் இன்று இரவு முதல் வியாபாரம் நடைபெற வாய்ப்பு உள்ளது என மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்