கரூர் மாவட்டத்தில் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பத்தே நாட்களில் 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்தது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து திமுக கரூர் மாவட்டப் பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான வி.செந்தில்பாலாஜி மாநில தேர்தல் ஆணையர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சு.மலர்விழி ஆகியோருக்கு நேற்று அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த நவ.16-ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் கரூர் மாவட்டத்துக்குட்பட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளில் புதிதாக 10 ஆயிரம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த நவ.26-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது.
அதாவது, பத்தே நாட்களில் 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுவது சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, புதிதாக பெயர் சேர்க்க, இணையதளம் வழியாக, நேரடியாக மற்றும் முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் எத்தனை என தெளிவுபடுத்த வேண்டும். மேலும், 4 தொகுதிகளிலும் புதிய வாக்காளர்கள் யார் எனவும் தெரியப்படுத்த வேண்டும்.
அத்துடன், கடந்த மக்களவைத் தேர்தலுக்கு பின் இறந்த வாக்காளர்களின் எண்ணிக்கையை, வாக்குச்சாவடி வாரியாக வெளியிட வேண்டும்.
படிவம் பெறப்பட்டு வாக்குச்சாவடி மைய அலுவலர் கள விசாரணை செய்யும்போது, வாக்குச்சாவடிக்குட்பட்ட திமுக வாக்குச்சாவடி மைய முகவருக்கு தெரியப்படுத்தி, அவர்களது கருத்துகளையும் கவனத்தில் எடுத்துக்கொண்ட பின்பே பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago