மேல்மலையனூர், கோவில் புரையூர், கப்ளாம்பாடி, அவலூர்பேட்டை ஆகிய பகுதிகளில் ‘நிவர்’ புயலினால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த நெல், வாழை, உளுந்து மற்றும் கரும்பு ஆகிய பயிர்களை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை நேற்று ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து செஞ்சி அருகே நல்லான்பிள்ளைபெற்றாள் கிராமத்தில் ஊற்று வாய்க்காலில் நீர் செல்வதையும், புத்தகரம், நரசிங்கராயன்பேட்டை ஆகிய கிராமங்களில் மழைநீரில் சேத மடைந்த மல்பெரி மற்றும் வாழைப் பயிர்களையும் ஆய்வு செய்தார்.
முன்னதாக அவலூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் 'நிவர்' புயலால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த பயிர் இழப்புகளை உடனடியாக கணக்கீடு செய்ய வேண்டும். ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள நீரின் கொள்ளளவு மற்றும் மதகுகள் ஆகியவைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
கிராம ஊராட்சிப் பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரினை உடனடியாக அகற்ற வேண்டும். அப்பகுதிகளில் நோய் தொற்று ஏற்படாத வகையில் கிருமிநாசினி தெளித்து சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அப்போது வேளாண் இணை இயக்குநர் ராஜசேகர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜவகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பெரியசாமி, முன்னாள் எம்பி சேவல் ஏழுமலை, வேளாண் உதவி இயக்குநர் சுரேஷ், வட்டாட்சியர்கள் நெகருன்னிசா ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago