நாமக்கல், தருமபுரி மாவட்டங்களில் உள்ள கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு

By செய்திப்பிரிவு

நாமக்கல், தருமபுரி மாவட்டங்களில் உள்ள கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் எஸ்.பிரபாகர் ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் ஆயிரத்து 52 கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் திருப்பணி செய்ய வேண்டிய கோயில்களை கண்டறியும் பணி இந்து சமய அறநிலையத்துறை அலுவ லர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கென இந்து சமய அறநிலையத்துறையை சேர்ந்த ஆய்வர்கள், செயல் அலுவலர்கள் மற்றும் பொறியியல் பணியாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இப்பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் எஸ்.பிரபாகர் நேற்று முன் தினம் ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சீராப்பள்ளி செவந்தீஸ்வரர் கோயில், சிங்களாந்தபுரம் திருவேஸ்வரர் கோயில், அத்தனூர் அத்தனூரம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அர்ச்சகர்கள், பக்தர்கள் மற்றும் இந்து அறநிலையத்துறை அலுவலர்களுடன் திருப்பணி குறித்து கருத்துக்களைக் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வுகளில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் (சேலம்) நா.நடராஜன், உதவி ஆணையர் கோ.தமிழரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் 1193 கோயில்கள் உள்ளன. இவற்றில் திருப்பணி மேற்கொள்ள வேண்டிய கோயில்களைக் கண்டறிதல் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நேற்று தமிழக இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பிரபாகர் தருமபுரி மாவட்டத்தில் கோயில் திருப்பணிகள் தொடர்பாக நேரடி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறும்போது, ‘தருமபுரி கோட்டை மல்லிகார்ச்சுன சுவாமி கோயில், ஏரிகோடிப்பட்டி வேணுகோபால சுவாமி கோயில்களில் திருப்பணி மேற்கொள்ளுதல் தொடர்பாக உரிய ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்’ என்றார்.

ஆய்வின்போது, அரூர் துணை ஆட்சியர் பிரதாப், இந்து சமய அறநிலையத் துறை தருமபுரி உதவி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்