ஈரோடு கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் கோயில் திருவிழா தொடங்கிய நிலையில், கம்பத்திற்கு புனிதநீர் ஊற்றி பெண்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
ஈரோடு கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன், பெரிய மாரியம்மன் கோயில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த 24-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன் கோயில்களில் கம்பம் நடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடந்து வருகின்றன. நேற்று காலை முதல் கோயில்களில் நடப்பட்டுள்ள கம்பத்திற்கு புனிதநீர் ஊற்றி ஏராளமான பெண்கள் வழிபாடு செய்தனர். தொடர்ந்து 9 நாட்களுக்கு கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி வழிபாடு நடக்கவுள்ளது.
கரோனா தொற்று காரணமாக, திருவிழாவை நடத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் குண்டம் இறங்கவும், தேரினை வடம்பிடித்து இழுக்கவும் அனுமதி இல்லை. எனவே, டிசம்பர் 6-ம் தேதி பூசாரி மட்டுமே குண்டம் இறங்கவுள்ளார். இதேபோல், தேரோட்டத்திற்கு பதிலாக தேர் பூஜை நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 7-ம் தேதி சிறப்பு அபிஷேகம், 8-ம் தேதி காலை பொங்கல் வைத்தல், மாவிளக்கு நிகழ்ச்சியும், 9-ம் தேதி கம்பம் பிடுங்கும் நிகழ்வும் நடக்கவுள்ளது. 10-ம் தேதி மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவடைகிறது.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் கோயிலுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago