ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிற மத்திய அரசின் சித்தாந்தம் குறித்து அதிமுக இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை, என அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்தார்.
ஈரோட்டில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மத்திய அரசின் சித்தாந்தமாக உள்ளது. இதன்படி, தனித்தனியாக நடந்து வரும் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்கள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்கத் தேர்தல்களை நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும். நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சியினரிடையே இந்த சிந்தாந்தம் விவாதப் பொருளாக இருந்து வருகிறது. ஆனால், இதுவரை மத்திய அரசு இதனை கொள்கை முடிவாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து அதிமுக இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.
எங்களைப் பொறுத்தவரை அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை சந்திப்பதற்கு தயாராகி வருகிறோம். அனைத்து தரப்பு மக்களுக்கும் பலனளிக்கும் திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது. எனவே, எப்போது தேர்தல் வந்தாலும், அதை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது.
‘நிவர்’ புயலினை மிகவும் லாவகத்துடன், புத்திசாலித்தனத்துடன் எதிர்கொண்டு, போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களிடமும் தமிழக முதல்வருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது, என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago