திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களிலிருந்து காணொலி வாயிலாக விவசாயிகள் பங்கேற்றனர்.
இதில் ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பூ. விசுவநாதன் பேசும்போது, ‘‘திருச்சி மாவட்டத்தில் அதிக அளவில் நெல் சாகுபடி செய்யும் இடங்களில் நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும்’’ என்றார்.
இதேபோன்று பல விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து ஆட்சியர் பேசியது:
திருச்சி மாவட்டத்தில் ராபி சிறப்பு பருவத்தில் இதுவரை மக்காச்சோளம் பயிர் செய்துள்ள 43 ஆயிரம் விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்துள்ளனர். மீதமுள்ளவர்களும் நவ.30-ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம்.
நிகழ் சம்பா பருவத்துக்கு தேவையான உரங்கள் இருப்பில் உள்ளன. இதுவரை 1 லட்சம் ஏக்கரில் சம்பா நடவுப் பணி முடிவடைந்துள்ளது.
நெற்பயிருக்கும் நவ.30-ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம்.
விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை வேளாண்மை உதவி இயக்குநர்களிடம் அளிக்கலாம் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார், வேளாண்மை இயக்குநர் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தி, தோட்டக்கலை துணை இயக்குநர் விமலா உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago