பேரிடர் காலங்களில் கால்நடைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு 27 கால்நடை அலுவலர்களை கொண்ட 5 விரைவு சேவை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது, என ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளை தாழ்வான தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் கட்டக் கூடாது. உயரமான பகுதிகளில் கொட்டகையில் கட்ட வேண்டும். மின்கம்பங்களில் கால்நடைகளை கட்டக் கூடாது. இதன் மூலம் மின்சாரத்தினால் ஏற்படும் கால்நடைகளின் இழப்பைத் தவிர்க்கலாம்.
முடிந்தவரை கால்நடைகளை மழை மற்றும் குளிரினால் பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் கால்நடைகளுக்கு ஏற்படும் நிமோனியா மற்றும் வைரஸ் காய்ச்சலை தவிர்க்கலாம். இரவு நேரங்களில் கொசு மற்றும் ஈ தொல்லையிலிருந்து கால்நடைகளை பாதுகாக்க புகை மூட்டம் செய்ய வேண்டும்.
பேரிடர் காலங்களில் கால்நடைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு 27 கால்நடை அலுவலர்களை கொண்ட 5 விரைவு சேவை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க 1962 மற்றும் 18004255880 ஆகிய அவசர கால எண்களை தொடர்பு கொள்ளலாம். மழைக்காலங்களில் கால்நடைகளில் இறப்பு ஏற்பட்டால் கால்நடை உதவி மருத்துவருக்கும், கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் அளிக்க வேண்டும்.
இறந்த கால்நடைகளை பாதுகாப்பாக சுண்ணாம்பு அல்லது பிளீச்சிங் பவுடர் போட்டு புதைக்க வேண்டும். இறந்த கால்நடைகளை ஆற்றிலோ, கிணற்றிலோ வீசக்கூடாது. கால்நடை மருந்தகங்களிலும் போதுமான அளவு மருந்துகள் மற்றும் ஊசி இருப்பு வைக்கப்பட்டு தயாராக உள்ளது, என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago