பச்சிளம் குழந்தைகளுக்கு வெற்றிகரமான சிகிச்சை திருச்சி அரசு மருத்துவமனைக்கு தமிழ்நாடு அரசின் விருது

By செய்திப்பிரிவு

குறை பிரசவத்தில் பிறந்த அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கு சிறந்த சிகிச்சை அளித்து காப்பாற்றியதற்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு தமிழ்நாடு அரசின் விருது கிடைத்துள்ளதாக அரசு மருத்துவமனை முதல்வர் கே.வனிதா தெரிவித்தார்.

இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஆண்டுக்கு 10,000 பிரசவங்கள் நடைபெறுகின்றன. இதில், 30 முதல் 40 சதவீதம் குழந்தைகள் அறுவைச் சிகிச்சையின் மூலம் பிறக்கின்றன. திருச்சி அரசு மருத்துவமனை தொடர்ந்து 3-வது ஆண்டாக பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் மாநில அளவில் சிறந்த இடத்தைப் பிடித்துள்ளது.

அரசு அறிவுறுத்தலின்படி நவ.15-ம் தேதி முதல் நவ.21 வரை பச்சிளம் குழந்தை வாரம் கடைபிடிக்கப்பட்டது. இதில், குறை பிரசவத்தில் பிறந்த அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கு சிறந்த சிகிச்சை அளித்து காப்பாற்றியதற்காக, திருச்சி அரசு மருத்துவமனையின் சேவையை அங்கீகரிக்கும் வகையில், சென்னையில் நவ.20-ம் தேதி நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு அரசு சார்பில் விருது வழங்கப்பட்டது. மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இந்த விருதை வழங்கினார்.

கர்ப்பக் காலத்தில் தாய்மார்களின் உடல் எடை அதிகரிப்பது, ரத்த சோகை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட காரணங்களால் குறை பிரசவம், குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பு போன்றவை நிகழ்கின்றன. திருச்சி மாவட்டத்தில் 2-க்கும் அதிகமான எண்ணிக்கையில் குழந்தைகள் பெறுவது அதிகமாக உள்ளதும் இதற்கு காரணமாக உள்ளது. பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே இதைத் தடுக்க முடியும்.

திருச்சி அரசு மருத்துவமனையில் நிகழாண்டில் இதுவரை பிறந்த 4,000 குழந்தைகள், வெளியிடங்களில் இருந்து சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட 1,000 குழந்தைகள் என 5,000 பச்சிளம் குழந்தைகளுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு, காப்பாற்றப்பட்டுள்ளன.

இதில், குறைந்த எடையுடன் பிறந்த 500-க்கும் அதிகமான குழந்தைகளில் நுரையீரல் முழுமையாக திறக்கப்படாத 150 குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, காப்பாற்றப்பட்டன. இதேபோல, குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகளுக்கு இதுவரை 500 டோஸ் நிமோனியா காய்ச்சல் தடுப்பூசி இடப்பட்டுள்ளது.

உடல்நிலை மிக மோசமாக உள்ள 8,000 பச்சிளம் குழந்தைகள், அரசு மருத்துவமனையின் தொடர் கண்காணிப்பில் உள்ளன. இந்தக் குழந்தைகள் குறிப்பிட்ட காலங்களில் வரவழைக்கப்பட்டு, மூளை வளர்ச்சி, உடல் வளர்ச்சி ஆகியவை தொடர்பாக பரிசோதனை செய்து, பெற்றோருக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதேபோல, மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கி மூலம் 1,800 குழந்தைகளுக்கு இதுவரை 4,000 லிட்டர் தாய்ப்பால் வழங்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு பிறந்த 325 குழந்தைகளில் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, அந்தக் குழந்தைகளும் மருத்துவர்களின் சிறந்த சிகிச்சையின் மூலம் குணமடைந்துவிட்டன என்றார்.

அப்போது, மருத்துவமனையின் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு தலைவர் எஸ்.நசீர், சிசு தீவிர சிகிச்சைப் பிரிவு தலைவர் கே.செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்