திருவள்ளூர் மாவட்டத்தில் கொட்டும் கனமழை செங்குன்றம், பூந்தமல்லியில் 10 செ.மீ. பதிவு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

By செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டும் கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

‘நிவர்’ புயலையொட்டி, திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 23-ம் தேதி இரவு முதல், மழை பெய்து வருகிறது. தொடக் கத்தில், சென்னையின் புறநகர் பகுதிகள் மற்றும் சில பகுதிகளில் லேசான, மிதமான மழையாக பெய்து வந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல், பூந்தமல்லி, சோழவரம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், பூண்டி, திருவாலங்காடு என, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழையாக கொட்டி வருகிறது.

நேற்று காலை 8 மணி வரை மாவட்டத்தில் சராசரியாக 4 செ.மீ., மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக செங்குன்றம் மற்றும் பூந்தமல்லியில் தலா 10 செ.மீ., மழையும், குறைந்த பட்சமாக திருத்தணியில் 1 மி.மீ., மழையும் பெய்துள்ளது. விட்டு விட்டு பெய்து வரும் இந்த கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் செல்லும் சி.டி.எச்., சாலை, செங்குன்றம்- திருவள்ளூர் சாலை, சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல், பழவேற்காடு பகுதியில் சுமார் 60 கி.மீ., வேகத்தில் காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக சீற்றத்துடன் காணப்படும் பழவேற்காடு கடல் பகுதிகளில் 12 அடி உயரத்துக்கு அலைகள் எழுகின்றன. பழவேற்காடு ஏரியின் நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது.

பழவேற்காடு ஏரிக்கரை பகுதிகளில் மீனவர்கள் நிறுத்தி வைத்துள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகளில், 4 படகுகள் நேற்று காற்றில் அடித்துச் செல்லப்பட்டது. அதனை மீனவர்கள் மீட்டனர். அதே போல், மீன் பிடி வலைகள் பின்னுவதற்காக மீனவர்கள் அமைத்துள்ள கொட்டகைகளும் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன.

மேலும், மீஞ்சூர் அருகே உள்ள காட்டுப்பள்ளி கிராமத்தில் உள்ள ஓட்டு வீடுகள் தார் பாய் போடப்பட்டுள்ளது.பழவேற்காடு ஏரியை ஒட்டியுள்ள கோட்டைகுப்பம், ஆண்டிகுப்பம், நடுவூர் மாதாகுப்பம் உள்ளிட்ட பகுதிகளின் உள்ளே மழைநீர் புகும் அபாயம் உள்ளதால், மீனவ மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்