8 மாதத்திற்குப் பின்னர் நாமக்கல் உழவர் சந்தை இன்று திறப்பு காய்கறி விற்கும் விவசாயிகள் மகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

8 மாதங்களுக்குப் பின்னர் இன்று நாமக்கல் கோட்டை சாலையில் உள்ள உழவர் சந்தை திறக்கப்பட உள்ளது. இது அங்கு காய்கறி விற்பனை செய்ய வரும் விவசாயிகளை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் ஒருபகுதியாக மக்கள் அதிகம் கூடும் காய்கறி சந்தைகளை வெவ்வேறு இடங்களுக்கு மாற்றம் செய்தது. அந்த வகையில் நாமக்கல் கோட்டை சாலையில் செயல்பட்டு வந்த உழவர் சந்தையும் கடந்த 8 மாதங்களுக்கு முன் மூடப்பட்டது.

அங்கிருந்த காய்கறி கடைகள் பேருந்து நிலையம், பூங்கா சாலை என வெவ்வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டது. எனினும், மக்கள் கூட்டம் குறையாததையடுத்து நாமக்கல் தெற்கு மற்றும் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. கடந்த 7 மாதங்களாக மேற்குறிப்பிட்ட பகுதியில் உழவர் சந்தை காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

தவிர, நாமக்கல் மாவட்டத்தில் கரோனா பாதிப்புகளும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. எனவே உழவர் சந்தையை பழைய இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கைவிடுத்து வந்தனர்.

இதையடுத்து கோட்டை சாலையில் உள்ள உழவர்சந்தை இன்று (26-ம் தேதி) முதல் செயல்படத் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்