ஈரோடு மாவட்டத்தில் 95 இடங்களில் 50 ஆயிரம் பேரை பாதுகாப்பாக தங்க வைக்க ஏற்பாடு அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

By செய்திப்பிரிவு

புயல் மழையை எதிர்கொள்ளும் வகையில், ஈரோடு மாவட்டத்தில் 95 இடங்களில், 50 ஆயிரம் பேர் வரை பாதுகாப்பாக தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

‘நிவர்’ புயல் காரணமாக கனமழை பெய்யும் மாவட்டங்களுக்கான ஆரஞ்ச் அலர்ட் பட்டியலில் ஈரோடு மாவட்டமும் இடம்பெற்றுள்ளது. கனமழையை எதிர்கொள்ளும் வகையில், ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் தாழ்வான பகுதிகளில் வசிப்போர், மழை வெள்ளத்தின்போது, தங்குவதற்காக ஏழு மாநகராட்சி பள்ளிகள், இரு திருமணமண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மரங்கள் விழுந்தால் அவற்றை அகற்ற இயந்திரங்கள், குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் செல்வதைத் தடுக்கும் வகையில் மணல் மூட்டைகள், பொக்லைன் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. பெரும்பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால், அதன் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ரப்பர் படகுகள்

இதேபோல், பேரிடர் மீட்பு மேலாண்மையில் பயிற்சி பெற்ற 65 காவலர்கள் அடங்கிய குழுவினை காவல்துறை தயார் நிலையில் வைத்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியோரை மீட்க மோட்டார் வசதியுடன் கூடிய ரப்பர் படகுகள் உள்ளிட்ட மீட்பு உபகரணங்களுடன் தீயணைப்புத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

கீரிப்பள்ளம் ஓடை

‘நிவர்’ புயலையட்டி, கோபி பகுதியில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று ஆய்வு செய்தார். பெருமழைக் காலங்களில் கீரிப்பள்ளம் ஓடையில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு, கோபி நகர குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்துவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் கீரிப்பள்ளம் ஓடைப்பகுதியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ஆட்சியர் சி.கதிரவன், ஆர்.டி.ஓ.ஜெயராமன், வட்டாட்சியர் தியாகராஜன் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறும்போது, கோபி கிரீப்பள்ளம் ஓடையை ரூ.11.5 கோடி மதிப்பில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 95 இடங்களில் 50 ஆயிரம் பேர் வரை பாதுகாப்பாக தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீர் நிலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது, என்றார்.

மதியம் வரை மழையில்லை

இதனிடையே நேற்று காலை முதல் ஈரோடு நகரில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது தூறல்கள் விழுந்து, எப்போது வேண்டுமானாலும் கனமழை தொடங்கலாம் என்ற நிலை மாலை வரை நீடித்தது.

பொதுவிடுமுறை காரணமாக அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. நகர சாலைகளில் வாகன இயக்கம் குறைவாகவே இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்