வியாபாரிகள் போராட்டம், வரத்து குறைவால் திருச்சி உழவர் சந்தையில் காய்கனி விலை உயர்வு

By செய்திப்பிரிவு

காய்கனி வியாபாரிகளில் ஒரு தரப்பினரின் போராட்டம் மற்றும் காய்கனி வரத்து குறைவு காரண மாக திருச்சி உழவர் சந்தையில் நேற்று காய்கனிகள் விலை கடுமையாக உயர்ந்திருந்தது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, திருச்சி காந்தி மார்க்கெட் கடந்த மார்ச் 30-ம் தேதி மூடப்பட்டது. அதைத்தொடர்ந்து, காய்கனி மொத்த விற்பனை பொன்மலை ஜி கார்னர் ஹெலிபேட் தளத்தில் திறந்தவெளியில் தற்போது நடைபெற்று வருகிறது. மாநகராட்சி மதுரம் மைதானம், தென்னூர் உழவர் சந்தை மைதானம் உள்ளிட்ட இடங்களில் சில்லறை விற்பனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திருச்சியில் காந்தி மார்க்கெட்டை மீண்டும் திறக்க வலியுறுத்தி நவ.24 மாலை 6 மணி முதல் காலவரையற்ற காய்கனி விற்பனை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக வியாபாரிகளில் ஒரு தரப்பினரும், வழக்கம்போல காய்கனி விற்பனை நடைபெறும் என மற்றொரு தரப்பினரும் அறிவித்திருந்தனர்.

அதன்படி, ஜி கார்னர் மொத்த காய்கனி விற்பனை மையத்தில் நேற்று முன்தினம் இரவு குறைந்த எண்ணிக்கையிலான வியாபாரிகளே விற்பனையில் ஈடுபட்டனர். அவர்களையும் கடை களை மூடும்படி மற்றொரு தரப்பு வியாபாரிகள் வலியுறுத்திய நிலையில், போலீஸார் அங்கு சென்று சமாதானப்படுத்தினர். பின்னர், சிலரைத் தவிர பெரும்பாலானோர் கடைகளை மூடிவிட்டுச் சென்றனர்.

இதற்கிடையே, திருச்சி உழவர் சந்தைகளில் நேற்று காய்கனி விலை கடுமையாக உயர்ந்திருந்தது. இதுதொடர்பாக வியாபாரிகள் கூறியதாவது: போராட்டம் காரணமாக சரக்கு ஏற்றிவர வேண்டாம் என தெரிவித்தும், அதையறியாமல் சரக்கு ஏற்றி வந்த லாரிகளை பிற மாவட்ட சந்தை களுக்கு வியாபாரிகள் அனுப்பி விட்டனர். சுமைப் பணி தொழி லாளர்களும் சரக்குகளை இறக்க மறுத்துவிட்டனர். ‘நிவர்’ புயலை யொட்டி 3 நாட்களுக்கு முன்பே மக்கள் காய்கனிகளை வாங்கிவிட்ட நிலையில், சில வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்திலும் ஈடுபட்டதால், உழவர் சந்தைகள் மட்டுமே நேற்று செயல்பட்டன.

இந்நிலையில், உழவர் சந்தை களில் காய்கனி விலை கடுமையாக உயர்ந்திருந்தது. கிலோ கேரட் ரூ.80-லிருந்து ரூ.200 வரை உயர்ந்திருந்தது. இதேபோல, பீன்ஸ் ரூ.40-லிருந்து ரூ.120 ஆகவும், தக்காளி ரூ.20-லிருந்து ரூ.60 ஆகவும், வெண்டைக்காய் ரூ.15-லிருந்து ரூ.40 ஆகவும், ஒரு காலிபிளவர் ரூ.20-லிருந்து ரூ.50 ஆகவும், சேனைக்கிழங்கு ரூ.20-லிருந்து ரூ.60 ஆகவும் என 2 மடங்கு மற்றும் அதற்கு மேல் விலை உயர்ந்திருந்தது என்றனர்.

காய்கறி, பழங்கள் தேவைக்கு...

இதற்கிடையே, சிறு காய்கறி வியாபாரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தேவையான காய்கள் மற்றும் பழங்கள் குறித்த விவரங்களை தினந்தோறும் மாலை 4 மணிக்குள் திருச்சி மாவட்ட மனிதவளர் சங்கம் கள்ளிக்குடி அலுவலகத்தில் தெரிவித்தால், அவை மறுநாள் கள்ளிக்குடி ஒருங்கிணைந்த காய்கறி பழங்கள் மற்றும் மலர்கள் வணிக வளாகத்தில் வழங்கப்படும் என மனிதவளர் சங்கத் தலைவர் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்