நெல்லையில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு முகக்கவசம் அணிவதில் அக்கறை குறைகிறது

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாநகர பகுதியில் தீபாவளிக்குப்பின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதில் மக்கள் அக்கறை செலுத்தவில்லை.

திருநெல்வேலி நகரில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தீபாவளியன்று (கடந்த 14-ம் தேதி) வெறும் 3 ஆக இருந்தது. தொடர்ந்து 3 நாட்களுக்கு தலா 2 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு குறைந்திருந்தது. கடந்த 20-ம் தேதியிலும் 3 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் 21-ம் தேதியிலிருந்து பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 11 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், மானூர், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி, பாளையங் கோட்டை, ராதாபுரம், சேரன்மகாதேவி, களக்காடு வட்டாரங்களில் யாருமே பாதிக்கப்படவில்லை.

மாநகரில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மக்களிடம் முகக்கவசம் அணிவது, பொது இடங்களில் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை திரவ சோப்பால் கழுவுவது குறித்த அக்கறை குறைந்திருக்கிறது. வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் பலரும் முகக்கவசம் அணிவதில்லை. பல நிறுவனங்கள், கடைகளில் பணியாற்றுவோரும் முகக்கவசம் அணிவதில்லை. காய்கறி சந்தைகள், உழவர் சந்தைகளிலும் விற்பனையாளர்கள் முகக்கவசம் அணிவதில்லை. பேருந்துகளில் பயணம் செய்வோரில் பலரும் முகக்கவசம் அணிவதில்லை.

தீபாவளியை முன்னிட்டு கடை வீதிகளிலும், வணிக நிறுவனங்களிலும் கூட்டம் அலை மோதிய நிலையில், இனிவரும் பண்டிகை காலங்களிலும் மக்கள் கூட்டம் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்தால் கரோனா தொற்று அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்