மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங் களில் கணினி இயக்குபவர்களாக பணியாற்றி வந்தவர்களுக்கு அரசுத் துறையில் நிரந்தர வேலை வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வருவாய்த் துறையில் தற்காலிக கணினி இயக்குபவர்கள் நலச்சங்கம் சார்பில் அதன் தலைவர் ராஜ் குமார் கூறும்போது, ‘‘தமிழக அரசின் வருவாய்த் துறையில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் ‘அடிப்படை விவரக்குறிப்பு தயாரிப்பவர்களாக’ (டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்) கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தோம்.
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் வாயிலாக பட்டப் படிப்பு மற்றும் கணினியில் ஓராண்டு படிப்பு ஆகியவை தகுதியாகவும், பதிவு மூப்பு அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்களில் தொகுப்பூதியம் அடிப்படையில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களாக பணியாற்றி வந்த நாங்கள் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ம் தேதி பணிநீக்கம் செய்யப்பட்டோம்.
அரசு வழங்கிய விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் திட்டங்கள் தொடர் பான அறிக்கைகளை அரசுக்கு அனுப்பும் பணிகளை நாங்கள் செய்து வந்தோம். இந்த திட்டங்கள் முடிவுற்றதால் நாங்கள் பணிநீக்கம் செய்யப் பட்டோம்.
அரசின் சிறப்பு திட்டங்கள் மட்டுமின்றி, கணினி தொடர்பான பணிகளையும், மக்கள் குறை தீர்வுக்கூட்டத்தில் பெறப்படும் மனுக்களை கணினியில் பதிவு செய்தல், பட்டா மாறுதல், பிறப்பு - இறப்பு பதிவு, புள்ளி விவரங்கள் தயாரித்தல், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கும் பணிகள் கணினியில் பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வந்தோம்.
திடீரென பணிநீக்கம் செய்யப் பட்டதால், கடந்த 4 ஆண்டுகளாக வேலை வாய்ப்பு இல்லாமல் வேறு வேலை கிடைக்காமல் வேதனையடைந்துள்ளோம்.
இந்நிலையில், தமிழக அரசுத்துறைகளில் புதிதாக டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பதவி உரு வாக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆகவே, வேலூர் மாவட் டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களாக பணியாற்றி வந்த எங்களுக்கு வருவாய்த் துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணி அல்லது கல்வி தகுதிக்கு ஏற்றார் போல தகுதியான பணி, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago