சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ‘நிவர்' புயலையொட்டி லேசான மற்றும் மிதமான மழை பெய்தது. மாமல்லபுரம் பகுதியில் அதிக மழை பெய்தது.
வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்தது. பள்ளமான பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. இதை உள்ளாட்சி அமைப்பினர் ஆங்காங்கே மோட்டார் மூலம் வெளியேற்றி வருகின்றனர்.
மாமல்லபுரம் பகுதியில் பிற்பகல் 3 மணிக்கு மேல் அதிக மழைபெய்யத் தொடங்கியது. முதலில் லேசாக பெய்த மழை பின் வலுக்கத் தொடங்கியது. புயல் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கடல் அலைகள் 15 அடிக்கு எழுந்து வந்து கரையை தாக்கின. இதனால் கடலோர பகுதியில் பல்வேறு இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டது. கடல் நீரும் உட்புகுந்தது.
கடலோரம் வைக்கப்பட்டிருந்த படகுகள் அலையில் இழுத்துச் செல்லப்பட்டன. மாமல்லபுரம் நகரில் தொல்லியல் சின்னங்கள் உள்ளபகுதியில் தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது. மதுராந்தகம் செய்யூர் பகுதிகளில் காலையில் லேசான சாரல் மழை பெய்தது. அதன் பின்னர் மழைஇல்லை. வானம் மேகமூட்டத்துடன்காணப்பட்டது. புயல் எச்சரிக்கைகாரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி, ஆவடி, செங்குன்றம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல், விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் உள்ளிட்ட சில பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.
மேலும், கடலோர பகுதியான பழவேற்காட்டில் நேற்று கடுமையான காற்று, கடல் சீற்றம் காணப்பட்டது. மாலையில் பலத்த மழை பெய்தது. மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் கரையிலேயே இருந்தன.
காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை காஞ்சிபுரம், உத்திரமேரூர், பெரும்புதூர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது குளிர்ந்த காற்று வீசியது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago