ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆண் கருத்தடை சிகிச்சை இருவார விழிப்புணர்வு நிகழ்ச்சியினை ஆட்சியர் கதிரவன் தொடங்கி வைத்தார்.
அப்போது ஆட்சியர் கூறியதாவது:
ஈரோடு மாவட்ட குடும்ப நலத்துறை மற்றும் சுகாதாரத்துறை சார்பாக ஆண்களுக்கான நிரந்தர நவீன கருத்தடை சிகிச்சை முகாம் வரும் 28-ம் தேதி முதல் டிசம்பர் 8-ம் தேதி வரை நடக்கிறது. இதன்படி, 28-ம் தேதி மொடக்குறிச்சியிலும், 30-ம் தேதி சிவகிரி ஆரம்ப சுகாதார நிலையத்திலும் முகாம் நடக்கிறது.
டிசம்பர் 1-ம் தேதி ஈரோடு காந்திஜி சாலை ஈரோடு மாநகராட்சி மருத்துவமனையிலும், சித்தோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், டிசம்பர் 2-ம் தேதி தூக்கநாயக்கன்பாளையம், மற்றும் திங்களூர், 3-ம் தேதி சென்னிமலை, கூகலூர், 4-ம் தேதி உக்கரம், நம்பியூர், 5-ம் தேதி மைலம்பாடி, புன்செய் புளியம்பட்டி, 7-ம் தேதி குருவரெட்டியூர், 8-ம் தேதி தாளவாடி, அத்தாணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை முகாம் நடக்கிறது. இது தொடர்பான விழிப்பணர்வு ரதம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு 10 ஆயிரத்து 627 பெண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை மேற்கொண்டு மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது. 118 ஆண்களுக்கு குடும்ப நல கருத்தடை சிகிச்சை நடைபெற்றதன் மூலம், மாநிலத்தில் இரண்டாவதாக இடம் பெற்றது. இந்த ஆண்டு 186 ஆண்களுக்கு குடும்ப நல கருத்தடை சிகிச்சை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நவீன ஆண் கருத்தடை சிகிச்சை முறையானது, 100 சதவீதம் பாதுகாப்பானது. பக்கவிளைவுகள் இல்லாதது. மருத்துவமனைகளில் தங்க வேண்டிய அவசியம் இல்லாதது. கடின உழைப்பிற்கு தடையில்லாதது. சிகிச்சை மேற்கொள்வோருக்கு ரூ. 1,100 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இதுதொடர்பான விவரங்களை 9443546455, 9442836562, 9790306610, 9095818118 என்ற எண்களில் தெரிந்து கொள்ளலாம், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago