தி.மலை மாவட்டத்தில் அம்மா இரு சக்கர வாகன திட்டத்துக்கு பெண்களிடம் இருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரி வித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழகத்தில் நகரம் மற்றும் கிராமங்களில் வசிக்கும் பெண்கள், பணி செய்யும் இடங்களுக்கு எளிதாக செல்ல மானியத்தில் இரு சக்கர வாகனம் வழங்கப்படுகிறது. 50 சதவீத மானியம் அல்லது ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு 75 சதவீத மானியம் அல்லது ரூ.31,250 மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரகப் பகுதியில் வசிக்கும் 2,806 பெண்கள் மற்றும் நகரப் பகுதியில் வசிக்கும் 712 பெண்களுக்கும் என மொத்தம் 3,518 பேருக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்துக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பதிவு பெற்ற நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களாக இருக்க வேண்டும். 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சமாக இருக்க வேண் டும். 125 சிசி திறனுக்கு மிகாமல் வாகனமாகவும், ஆட்டோ கியர் மற்றும் கியர் இல்லாத வாகனமாக இருக்க வேண்டும். 01-01-2018-ம் தேதிக்கு பிறகு, வாகன பதிவுகள் சட்டத்தின்படி பதிவு செய்த வாகனமாக இருக்க வேண்டும்.
3 ஆண்டுகள் வரை வாகனத்தை விற்கக் கூடாது. 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட நபராக இருக்க வேண்டும். இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். குக்கிராமங்கள் மற்றும் மலைப்பகுதியில் பணி செய்பவர்கள், பெண்களை குடும்பத் தலைவராக கொண்டவர், கணவரால் கைவிடப்பட்டவர்கள், இளம் விதவை, மாற்றுத்திறனாளி பெண்கள், முதிர் கன்னிகள், பழங்குடியினர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பத்துடன் வயது சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், வருமான சான்றிதழ், வேலை செய்வதற்கான பணிச்சான்று, ஆதார் அட்டை, கல்வி தகுதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருந்தால் ஜாதிச் சான்றிதழ், மாற்றுத்திறனாளியாக இருந்தால் அடையாள அட்டை, முன்னுரிமை கோரும் சான்றிதழ், கொள்முதல் செய்யப்படும் வாகனத்தின் விலைப் புள்ளி ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
தேர்வு செய்யப்பட்ட விண்ணப் பங்களை, இரண்டு கட்டங்களாக கள ஆய்வு செய்து சரி பார்க்கப்படும். வட்டார வளர்ச்சி அலுவலகங் கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் கட்டணம் இல்லாமல் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும், www.tamilnadumahalir.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும். இது தொடர்பாக, தி.மலை காந்தி நகர் 7-வது தெருவில் உள்ள மகளிர் திட்ட இயக்குநர் அலுவலகத்தை அணு கலாம்” என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago