அந்தியூர் வனச்சரகத்தில் சூழல் சுற்றுலா வனத்துறை ஏற்பாடுகள் தீவிரம்

By செய்திப்பிரிவு

அந்தியூர் வனச்சரகத்தில் பயணிகள் சூழல் சுற்றுலா மேற்கொள்ள வனத்துறை ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. வனஉயிரின சரணாலயமாக இருந்த இவ்வனப்பகுதி கடந்த 2013-ல் ஆண்டு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. புலிகள் காப்பகத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு பயணிகளை அழைத்துச்செல்வதற்காக வண்ணபூரணி வனச்சுற்றுலா திட்டம் 2017-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

புலிகள் காப்பகத்தில் உள்ள சத்தியமங்கலம், பவானிசாகர், தலமலை, ஆசனூர், கேர்மாளம், தாளவாடி, டி.என்.பாளையம் ஆகிய 7 வனச்சரகங்களிலும், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகள் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். இதற்கென கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு, இணையம் மூலம் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டது. சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்ட நேரம் மற்றும் தங்குமிடப் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால், இந்த சுற்றுலாவிற்கு வரவேற்பு குறைந்தது. கரோனா தொற்று பரவியதால் தற்போது வண்ணபூரணி சுற்றுலா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்தியூர், பர்கூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயணிகள் சூழல் சுற்றுலா மேற்கொள்ள வனத்துறை ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

சுற்றுலா பயணிகள் அந்தியூரில் உள்ள விடுதியில் தங்கி அங்கிருந்து வரட்டுப்பள்ளம் அணை, பர்கூர் கால்நடை ஆராய்ச்சி நிலையம், மணியாச்சிப்பள்ளம், கொங்காடை ஆகிய பகுதிகளுக்கு சூழல் சுற்றுலா மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள் தங்கும் வகையில் தாமரைக்கரையில் உள்ள வனத்துறை ஓய்வு விடுதி சீரமைக்கப்பட்டு வருகிறது. வனக்குழுக்கள் மூலம் வாரத்திற்கு இரண்டு நாள் என்ற அடிப்படையில் சுற்றுலா செல்லும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டு வருகிறது, என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்