வன உரிமைச்சட்டத்தை அமல்படுத்தக்கோரி கோபியில் மலைவாழ் மக்கள் காத்திருப்புப் போராட்டம்

By செய்திப்பிரிவு

வன உரிமைச் சட்டத்தை உடனடியாக அமலாக்கவேண்டும், பழங்குடி மக்களுக்கு சாதிச்சான்று வழங்க வேண்டும் என்பதுள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் கோபியில் காத்திருப்புப் போராட்டம் நடந்தது.

வன உரிமைச் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தவேண்டும், சுற்றுச்சூழல் சட்டத்தை திரும்பப் பெறவேண்டும், அனைத்து பழங்குடி மக்களுக்கும் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கி, தொகுப்பு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும், பழங்குடி மக்கள் நிலத்தை பழங்குடி அல்லாதவர்களுக்கு பத்திரப் பதிவு செய்வதை தடை செய்யவேண்டும், ஈரோடு மாவட்ட மலைவாழ் மக்களுக்கு மலையாளி என சாதிச்சான்று வழங்கவேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் கோபியில் காத்திருப்புப் போராட்டம் நடந்தது.

இப்போராட்டத்திற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைச்செயலாளர் சடையப்பன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ரகுராமன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் முனுசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டாரச் செயலாளர்கள் துரைசாமி, கெம்புராஜ், முருகேசன், குத்தியாலத்தூர் கமிட்டி ராஜப்பன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

பர்கூர், கடம்பூர், தாளவாடி உள்ளிட்ட மலைப்பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்தின்போது, கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதனைத் தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கோபி கோட்டாட்சியர் ஜெயராமனிடம் அளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்