கார்த்திகை தீபத்திருவிழா விற்பனைக்காக, ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அகல் விளக்குகள் தயாரிப்புப் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கார்த்திகை தீபத்திருவிழா வரும் 29-ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபத்திருவிழாவின்போது வீடுகளில், மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளை அதிக அளவில் ஏற்றி வைத்து கொண்டாடுவது வழக்கம். தீபத்திருவிழாவிற்குத் தேவையான அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக நடந்து வருகிறது.
ஈரோட்டில் பச்சப்பாளி, கொல்லம்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி, நசியனூர், புன்செய் புளியம்பட்டியை அடுத்த அலங்காரிபாளையம், பவானிசாகரை அடுத்த செல்லம்பாளையம், வரப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஈரோட்டில் தயாராகும் அகல் விளக்குகள் கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அகல்விளக்கு தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கூறியதாவது:
கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான அகல் விளக்குகள் தயாரிப்பு பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. மழைக்காலமாக இருப்பதால், மண்ணை பதப்படுத்தி, விளக்குகள் தயாரிப்பதில் சிக்கல் உள்ளது. பனிப்பொழிவு காரணமாக விளக்குகளை காய வைக்க முடியாத நிலை உள்ளது. 100 எண்ணிக்கை கொண்ட சிறிய தீப விளக்கு, 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. விளக்குகளின் அளவிற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது, என்றனர்.
தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதில் நீதிமன்றமும், அரசும் கட்டுப்பாடு விதித்த நிலையில், கார்த்திகை தீபத்திருவிழாவின் போது அதிக விளக்குகளை ஏற்றி பொதுமக்கள் கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கையுள்ளதாக அகல் விளக்கு தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago