ஈரோடு மாவட்டத்தில் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ், 50 சதவீதம் மானிய விலையில் வாகனங்களைப் பெற பெண்கள் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த உழைக்கும் பெண்கள், அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ், வாகனம் வாங்க ரூ.25 ஆயிரம் மானியம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் என இதில் எது குறைவோ அத்தொகை அரசின் மூலம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன்பெறும் பெண்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகவும், 18 முதல் 45 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது எல்.எல்.ஆர். இருந்தால் போதுமானது. ஆனால், மானியம் பெறும் போது ஓட்டுநர் உரிமம் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மலைப்பகுதியைச் சேர்ந்தோர், கணவனால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள், 35 வயதைக் கடந்து திருமணமாகாத பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், நகராட்சிஅலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago