கொடிவேரி பாசன வாய்க்கால்களில் சீரமைப்புப் பணி நடைபெறுவதற்காக நீர் நிறுத்தப்படுவது குறித்து பாசன விவசாயிகள் கருத்துக் கேட்புக் கூட்டம் கோபியில் நேற்று நடந்தது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள கொடிவேரி அணையிலிருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை கால்வாய் மூலம் 24 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. இந்த வாய்க்கால்களைப் புதுப்பித்து நவீனப்படுத்த ரூ.144 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இப்பணிகளை மேற்கொள்ள வாய்க்கால் சீரமைப்பு மற்றும் நீர் நிறுத்தம் குறித்து முடிவு செய்ய பாசன விவசாயிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டம் கோபியில் நேற்று நடந்தது.
தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனசபைத் தலைவர் சுபி.தளபதி தலைமை வகித்தார். பாசன பகுதிகளில் உள்ள 21 விவசாய கிளைச் சங்கங்களின் உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் சுபி. தளபதி பேசும்போது,வாய்க்கால் கரைகள் மற்றும் மதகுகளை சீரமைக்க அரசு ஒதுக்கியுள்ள நிதியை, சரியான நேரத்தில் பயன்படுத்தி பயன்பெற அனைத்து விவசாய சங்கங்களும் ஒத்துழைக்கவேண்டுமென கேட்டுக்கொண்டார்.
மேலும், வாய்கால்களில் அமைக்கப்படும் கான்கிரீட் தளங்கள், மதகுகள், படித்துறைகள், கிளைவாய்க்கால் பிரிவுகள் மற்றும் மழை நீர் போக்கிகள் உள்ளிட்டவற்றை சரியான இடத்தில் அமைக்கவும், பணிகள் முறையாக நடைபெற விவசாயிகள் கண்காணிப்பில் ஈடுபடவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும்,தற்போது நடைபெற்று வரும் முதல் போக பாசனம் முடிந்த பிறகு, வாய்க்கால்களை குத்தகை தாரர்களுக்கு ஒப்படைக்கலாமா அல்லது இரண்டாம் போக சாகுபடி முடிந்த பின்னர் ஒப்படைக்கலாமா என கூட்டத்தில் விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. தற்போது நடைபெற்றுவரும் முதல் போக சாகுபடி முடிந்தவுடன், ஒரு போக சாகுபடியை கைவிட்டுவிட்டு, வாய்க்கால்களின் மேம்பாட்டுப்பணிக்காக நான்கு மாதங்கள் தண்ணீரை நிறுத்திவைக்கலாம் என பெரும்பாலான விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago