திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே சிங்கிகுளம் கிராமத்தையொட்டி உள்ள மலைப்பகுதியில் இருந்து அடிக்கடி வெளியே வரும் கரடிகள், மலையடிவார நிலங்களுக்குள் புகுந்து பயிர்களுக்கு சேதம் விளைவித்து வருகின்றன. கடந்த 6 மாதங்களுக்கு முன் அப்பகுதியில் விவசாயி ஒருவரை கரடி தாக்கியது. வனத்துறையினர் கூண்டு வைத்தனர். அதில் கரடி ஒன்று சிக்கியது.
இந்நிலையில் சிங்கிகுளம் பகுதியில் வேலாயுதம் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் கரடியொன்று தவறி விழுந்தது. கிணற்று தண்ணீரில் கரடி தத்தளித்ததைக் கண்ட விவசாயிகள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
களக்காடு புலிகள் காப்பகம் இணை இயக்குநர் இளங்கோ தலைமையில் வனச்சரகர் பாலாஜி மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள், வன ஊழியர்கள் அங்குவந்து கரடியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். திருநெல்வேலியிலிருந்து கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு கரடிக்கு துப்பாக்கி மூலம் மயக்க மருந்து செலுத்தப்பட்டது. மயங்கிய கரடி தண்ணீருக்குள் மூழ்கிவிடாமல் இருக்க, வனத்துறையினர் கூண்டு ஒன்றை கிணற்றில் இறக்கினர். அரைமயக்கத்தில் இருந்த கரடி அந்த கூண்டுமீது ஏறி கிணற்றின் வெளியே வந்து தப்பியோடியது. பின்னர் நீண்ட போராட்டத்துக்குப்பின் வனத்துறையினர் அப்பகுதி மக்களின் ஒத்துழைப்புடன் கரடியை பிடித்து காட்டுப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago