பெரம்பலூரில் உள்ள வேளாண் விளைபொருள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் புதன் கிழமைதோறும் பருத்தி, மக்காச் சோளம் விளை பொருட்களுக்கான மறைமுக ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூட செயலாளர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் வடக்கு மாதவி சாலை காந்திநகர் பகுதியிலுள்ள பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையன்று பருத்தி மற்றும் மக்காச்சோளம் விளை பொருட்களுக்கான மறைமுக ஏலம் நடைபெறுகிறது.
இந்த ஏலத்தில் இந்திய பருத்திக் கழகம், உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் கலந்துகொள்ள இருப்பதால் தங்களின் விளைபொருட்களின் தரத்துக்கேற்ப விலை பெறலாம். வேளாண் விளைபொருட்களை, சுத்தம்செய்து, கலப்படமில்லாமல் நன்கு நிழலில் உலர்த்திக் கொண்டுவந்து நல்ல விலைக்கு விற்று பயன்பெறலாம். வேளாண் விளைபொருட்களை உலர்த்திக் கொள்ள உலர் களம் வசதியும், இருப்பு வைத்துக் கொள்ள நவீன சேமிப்புக்கிடங்கு வசதியும், ரூ.3 லட்சம் வரையில் பொருளீட்டுக் கடன் பெறும் வசதியும் பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள விவசாயிகள் தங்களது வேளாண் விளைபொருட்களுக்கு நல்ல விலை பெறுவதோடு, சரியான எடை, கமிஷன், தரகு இல்லாமல் விற்பனை செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago