ராஜராஜசோழனைக் காட்டிலும் ராஜேந்திரசோழன் தான் கடாரம் வரை சென்று வெற்றி வாகை சூடினார். அதேபோல, கருணாநிதியை விட அவரது மகன் மு.க.ஸ்டாலின் 8 மடங்கு வெற்றிபெற்று தமிழகத்தில் அடுத்து ஆட்சியை பிடிப்பார் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் அக்கட்சி யின் பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘‘தமிழகத்துக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா வந்தது, அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேசியது, அரசு விழாவில் கலந்து கொண்டது என எதிலும் எங்களுக்கு எந்த விதமான மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அரசு விழா மேடையை அரசியல் மேடையாக மாற்றி, எதிர்க்கட்சியினரை தனது இஷ்டத்துக்கு வசை பாடிவிட்டு அமித்ஷா சென்றிருப்பது கண்டனத்துக்குரியது.
இது ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிக்கும் செயலுக்கு சமம். அரசியலுக்கும், அரசுக்கும் கொஞ்சம் கூட வித்தியாசம் தெரியாமல் ஜனநாயகத்தை சாகடித்து, சர்வாதிகாரத்தை தலை தூக்கியுள்ளார்கள். நெறி முறைகளை மீறி, மத்திய, மாநில அரசுகள் இவ்வாறு நடந்துக் கொண்டதை திமுக வன்மையாக கண்டிக்கிறது.
தமிழக அரசு சிறந்து விளங்குவதாக மத்திய அமைச்சர் பாராட்டியுள்ளார். தமிழக அரசுக்கு அவர் நற்சான்றிதழை வழங்கியதை பார்த்து மக்கள் சிரிக்கிறார்கள்.
மத்தியில் காங்கிரஸ் 10 ஆண்டுகள் ஆட்சி செய்தபோது கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட தயாரா? என அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் பல இடங்களில் புயல் பாதிப்பு ஏற்பட்டது. அதற்கான நிதியை தமிழக அரசு கேட்டது, இதுவரை புயல் பாதிப்புக்காக எவ்வளவு நிதியை தமிழகத்துக்கு வழங்கியுள்ளீர்கள் என மத்திய அரசு பட்டியலிட தயாரா? முதலில் நீங்கள் பட்டியலிடுங்கள், பிறகு நாங்கள் செய்த சாதனைகளை பட்டியல் இடுகிறோம்.
திமுக, தோன்றியது முதல் பல தலைவர்களை சந்தித்துவிட்டது. எங்களுக்கு லட்சியம், கொள்கை, கட்டுப்பாடு உள்ளது. திமுகவை கிள்ளுக்கீரையாக யார் கருதினாலும், அவர்கள் நிச்சயம் ஏமாந்து தான் போவார்கள். கருணாநிதி தற்போது இல்லையே, அவரது மகன் தானே இருக்கிறார் என அமித்ஷா நினைக்கிறார்.
ராஜாராஜ சோழனைக் காட்டிலும், ராஜேந்திரசோழன் தான் கடாரம் வரை சென்று வென்றான் என்பதை இங்கே நினைவுப்படுத்துகிறேன். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியை விட 8 மடங்கு வெற்றிபெற்று தமிழகத்தில் அடுத்த ஆட்சி அமைக்கும் வல்லமை ஸ்டாலினுக்கு உண்டு.
இந்தியாவில் எந்த மாநிலத்தில் வாரிசு அரசியல் இல்லை. இது போன்ற பேச்சுகளை பிஹாருக்கு சென்று அமித்ஷா பேச வேண்டும். தமிழகத்தில் பேசக்கூடாது. ஊழல் குறித்து பேசும் அமித்ஷா, ஊழல் செய்து, சிறைக்கு சென்ற ஜெயலலிதா படத்துக்கு பூ போட்டாரே அதை என்னவென்று சொல்வது. வாரிசு அரசியலை தென் மாநிலத்தில் ஒழிப்போம் என அமித்ஷா பேசியிருக்கிறார். ஓ.பி.எஸ். மகன் தற்போது எம்பியாக உள்ளாரே? அது வாரிசு அரசியல் இல்லையா?
அதேபோல், விஜயராஜ், பிரமோத் மகாஜன், வருண்காந்தி, பியூஸ்கோயல் மகன், உ.பி. முதல்வர் ஆதித்யா என நிறைய பேர் தற்போது வாரிசு அரசியல் செய்கிறார்களே? இதெல்லாம் அமித்ஷாவுக்கு தெரியாதா என்ன? இதையெல்லாம் அமித்ஷா ஒழித்து கட்டிவிடுவாரா? தமிழகம் ஒன்றும் பிஹார் அல்ல, பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரால் தமிழ் உணர்வு உள்ள தன்மானம் பெற்றது தமிழ் மண்.
இங்கேயுள்ள வரலாறு தெரியாமல் பேசக்கூடாது. எங்களுடன் நேரடி விவாத்துக்கு அமித்ஷா தயார் என்றால், நாங் களும் தயாராக உள்ளோம். 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ள தபால் ஓட்டு முறையை எதிர்த்து திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்’’ என்றார்.
இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் பொதுச்செயலாளர் துரை முருகன் முன்னிலையில் திமுக வில் இணைந்தனர்.
அப்போது, வேலூர் நாடாளு மன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு) கார்த்திகேயன் (வேலூர்) உட்பட பலர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago