திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க வலியுறுத்தி நவ.24-ம் தேதி மாலை முதல் காய்கறி விற்பனை நடை பெறாது என வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
திருச்சி காந்தி மார்க்கெட் மாநகருக்கு மத்தியில் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இந்த மார்க்கெட் மூடப்பட்டது. மாற்று ஏற்பாடாக பொன்மலை ஜி கார்னர், தென்னூர், உறையூர், கே.கே.நகர், காஜாமலை, கோட்டை, ரங்கம் உள்ளிட்ட இடங்களில் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில் காந்தி மார்க்கெட்டை மீண்டும் திறக்க வேண்டுமென வியாபாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதனை திறக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு வரும் நவ.26-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகள் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற இச்சங்கத் தலைவரும், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் பொதுச்செயலாளருமான வீ.கோவிந் தராஜூலு பேசும்போது, ‘‘காந்தி மார்க் கெட்டை திறக்க வலியுறுத்தி வியாபா ரிகள் மற்றும் வணிகர் சங்கங்கள் சார்பில் பல்வேறு விதமான போராட் டங்கள் நடைபெற்று வருகின்றன. இதே கோரிக்கையை வலியுறுத்தி வரும் 24-ம் தேதி மாலை முதல் திருச்சி யில் காய்கறி விற்பனை நடைபெறாது.
நவ.26-ம் தேதி விசாரணைக்கு பிறகு காந்தி மார்க்கெட் திறக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம். ஒருவேளை வியாபாரிகளுக்கு எதிரான உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், அதன்பிறகு காந்தி மார்க்கெட் முன்பு மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். மேலும் வியாபாரிகளின் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டமும் நடைபெறும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago