பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் நேற்று நடைபெற்ற முன்மாதிரி பேரவைக் கூட்டத்திலிருந்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் எறையூரிலுள்ள பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் 43-வது முன்மாதிரி பேரவைக் கூட்டம் ஆலை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தமிழ்நாடு சர்க்கரை துறை பொதுமேலாளர் விஜயா தலைமை வகித்தார். தலைமை பொறியாளர் பிரபாகரன், தலைமை ரசாயனர் முத்துவேலப்பன், ஆலை தலைமை நிர்வாகி முகமது அஸ்லம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த ஞானமூர்த்தி, ராஜா சிதம்பரம், ஏ.கே.ராஜேந்திரன், சீனிவாசன், சக்திவேல், அன்பழகன், மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு 2015-2017 வரை கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை திருப்பி வழங்குவது குறித்து அதிகாரிகள் அளித்த பதில் திருப்தியளிக்காததால் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர், பெரம்பலூர் சர்க்கரை ஆலை முன்பு நடைபெற்ற அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டத்துக்கு பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ஞானமூர்த்தி தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில், கரும்பு விவசாயிகளுக்கு பெரம்பலூர் சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 33 கோடியை, வரும் டிச.31-க்குள் ஒரே தவணையில் வழங்க கோரி தமிழக முதல்வர் பெரம்பலூர் வருகை தரும் போதும், பேரவைக் கூட்டம் நடைபெறும்போதும், ஆலை அரைவை தொடங்கும்போதும், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago