குமாரபாளையம் நகராட்சியில் புதைவட மின் பணிகள் டிசம்பரில் நிறைவடையும் அமைச்சர் தங்கமணி தகவல்

By செய்திப்பிரிவு

குமாரபாளையத்தில் நடைபெற்று வரும் புதைவட மின் கம்பிகள் அமைக்கும் பணிகள் டிசம்பர் மாத முடிவில் நிறைவு பெறும் என அமைச்சர் தங்கமணி தெரி வித்தார்.

குமாரபாளையம் காவேரி நகரில் தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். அப்போது அமைச்சர் தங்கமணி கூறியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு ஊரிலும் வார்டு வார்டாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெறும் நிகழ்வு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள குறைகளை ஒரு வார காலத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப் படும். வீடு, இடம் வேண்டும் என்பவர்களுக்கும் மாற்று இடம் ஏற்பாடு செய்து தரப்படும்.

இரு நாட்கள் முன்பு முதல்வர் பழனிசாமி, குமாரபாளையம் வந்தபோது மாற்றுத்திறனாளி ஒருவர் அரசு வேலை வேண்டுமென்று முதல்வரிடம் மனு கொடுத்தார். இதன்படி இவருக்கு குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் பணி வழங்கப்பட்டுள்ளது. மக்கள் குறைகளை தொடர்ந்து கேட்டு, அவற்றை நிவர்த்தி செய்து வருகிறோம்.

எதிர்கட்சிகளின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து, கரோனா பரவல் குறைக்கப் பட்டுள்ளது. மின்வாரிய பணி யாளர்கள் சிலர், அவர்களாக உதவியாளர்களை நியமித்து, பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் மின்சாரப் பணிகளைச் செய்துள்ளனர். இதனால் சில விபத்துகள் நடந்துள்ளன. இது போன்ற பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளோம். இனி இது போல், எந்த நிகழ்வும், எங்கும் நடக்கக்கூடாது.

தமிழகத்தில் முதன்முறையாக குமாரபாளையத்தில் புதைவடம் வழியாக மின்கம்பிகள் அமைக்கும் பணி, ரூ.200 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது. இப்பணிகள் டிசம்பர் மாத முடிவில் முழுமையாக நிறைவு பெறும், என்றார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மெகராஜ், ஆர்.டி.ஒ. மணிராஜ், வட்டாட்சியர் தங்கம், நகராட்சி ஆணையர் ஸ்டான்லிபாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்