ஈரோடு மாவட்ட முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம்

By செய்திப்பிரிவு

சென்னிமலை, கோபி பச்சமலை உள்ளிட்ட முருகன் கோயில்களில் பக்தர்கள் பங்கேற்பின்றி சூரசம்ஹாரம் நேற்று நடந்தது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் கடந்த 15-ம் தேதி கந்தசஷ்டி பெருவிழா தொடங்கியது. கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில், கந்தசஷ்டி பெருவிழாவின்போது நடக்கும் அபிஷேக ஆராதனை, ஹோம பூஜைகள், சூரசம்ஹாரம், திருக்கல்யாண உற்ஸவம் போன்றவற்றில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேநேரத்தில் பக்தர்கள் காப்புக்கட்டி, சஷ்டி விரதம் இருக்க அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி, ஈரோடு மாவட்ட முருகன் கோயில்களில் கந்த சஷ்டி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று பக்தர்கள் பங்கேற்பின்றி நடந்தது. கோபியை அடுத்த பச்சமலை பாலமுருகன் கோயிலில், நேற்று அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. யாகசாலை பூஜையைத் தொடர்ந்து அபிஷேக ஆராதனை நடந்தது. அதன்பின்னர், யாகசாலையில் இருந்து சுவாமி சப்பரத்தில் கோயில் பிரகாரத்தில் உள்ள சன்னதிகள் முன் எழுந்தருளினார். தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள பிரகாரத்தில் சூரசம்ஹாரம் நடந்தேறியது. இந்த நிகழ்வில் குறைவான எண்ணிக்கையில் பக்தர்கள் பங்கேற்றனர்.

இதேபோல் சென்னிமலை முருகன் கோயில், திண்டல் முருகன் கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் பிரகாரங் களில் பக்தர்கள் பங்கேற்பின்றி சூரசம்ஹாரம் நடந்தேறியது. இந்த நிகழ்விற்கு பிறகு காப்புக்கட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் முருகப் பெருமானை வழிபட அனுமதிக்கப்பட்டனர். இன்று (21-ம் தேதி) திருக்கல்யாண உற்ஸவத்துடன் கந்தசஷ்டி பெருவிழா நிறைவடையவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்