மருத்துவம் பயில மகளுக்கு இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த வழியின்றி தவிக்கும் பந்தல் தொழிலாளி

By ஜெ.ஞானசேகர்

அரசின் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் தன் மகளுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும், கட்டணம் செலுத்த வழியின்றித் தவிக்கிறார் பந்தல் தொழிலாளி ஒருவர்.

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகேயுள்ள சித்தை யங் கோட்டையைச் சேர்ந்தவர் மு.பாண்டிமுருகன். பந்தல் தொழிலாளியான இவரது மகள் சோபனாவுக்கு, 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பயில இடம் கிடைத்துள்ளது.

இதையடுத்து, பாண்டிமுருகன் தன் மகள் சோபனாவுடன் நேற்று திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரிக்குச் சென்றபோது முதலாம் ஆண்டு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், புத்தக கட்டணம் என பல்வேறு கல்வி நடைமுறைகளைக் குறிப்பிட்டு ரூ.7.15 லட்சம் செலுத்த வேண்டும் என்றும், கலந்தாய்வின்போது ரூ.25,000 செலுத்திவிட்டதால் எஞ்சிய ரூ.6.90 லட்சத்தை செலுத்துமாறு கூறியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பாண்டிமுருகன், பணத்தைத் திரட்ட வழி தெரியாமல் தவிக்கிறார்.

இதுகுறித்து பாண்டிமுருகன், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:

மருத்துவராக வேண்டும் என்பதே என் மகளின் கனவு. கடந்த ஆண்டே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தும் மருத்துவம் பயில இடம் கிடைக்கவில்லை. வீட்டில் இருந்தவாறே தொடர்ந்து தன்னை தயார்படுத்தி வந்த சோபனா இந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார். 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. இதனால் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் இருந்தோம். ஆனால், தனியார் கல்லூரியில் ரூ.6.90 லட்சம் செலுத்த வேண்டும் என்று கூறியதால் அதிர்ச்சி அடைந்தோம். அட்மிஷன் போட்டுவிட்டோம். கட்டணத்தைச் செலுத்த சில நாட்கள் அவகாசம் வாங்கியுள்ளேன் என்றார்.

மாணவி சோபனா கூறியபோது, “என் தந்தையால் அவ்வளவு பணத்தைத் திரட்ட முடியாது. கல்விக் கடனும் முதலாம் ஆண்டில் கிடைக்காது என்று கூறுகின்றனர். எனவே, நான் மருத்துவம் பயில தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்