பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தும் யானைகளை காட்டுக்குள் விரட்ட நிரந்தரமான திட்டம் தேவை தென்காசி ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

கரோனா தொற்று பரவல் காரணமாக தென்காசி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில், 8 மாதங்களுக்குப் பின் காணொலி காட்சி மூலம் நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் சமீரன் தலைமை வகித்தார். தென்காசி, கடையநல்லூர், கீழப்பாவூர், சங்கரன்கோவில், குருவிகுளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களில் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

மனுக்கள் மீது ஆய்வு

கூட்டத்தில் ஆட்சியர் பேசும்போது, "தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து, அணைகள் நிரம்பியுள்ளன. குளங்களும் நிரம்பி வருகின்றன. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர். பயிர் காப்பீட்டுத் திட்டம் குறித்து மாவட்ட அளவிலான குழுக் கூட்டம் நடத்தப்பட்டு, காப்பீட்டுத் தொகை பயனாளிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிசான நெற்பயிர்களை அனைத்து விவசாயிகளும் காப்பீடு செய்து பயன்பெற வேண்டும். உளுந்து, பாசிப்பயறு பயிர்களுக்கு வரும் 30-ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும்.

விவசாயிகளுக்கு கடன் வழங்குவது தொடர்பாக அனைத்து வங்கியாளர்கள் கூட்டத்தை அடுத்த வாரம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் அளிக்கும் அனைத்து மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வேன்” என்றார்.

விவசாயிகள் கோரிக்கை

விவசாயிகள் பேசும்போது, “கடையம் ஒன்றியம் சிவசைலம் பகுதியில் விளைபொருட்களை எடுத்துச் செல்லவும், விவசாயப் பணிகளைச் செய்ய இயந்திரங்களை கொண்டுசெல்ல வும் வயல்வெளிச் சாலை அமைக்க வேண்டும். சிவசைலத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். வீரகேரளம்புதூர் வட்டம் பெரிய இரட்டைகுளத்தில் மடைச்சுவர் சேதமடைந்துள்ளது. இதனை சரி செய்ய வேண்டும்.

கடையம் வட்டாரத்தில் காய்கறிகளை விற்பனை செய்ய கமிஷன் கடைகள் இல்லை. காய்கறிகளை பாவூர்சத்திரம் சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. எனவே, கடையம் வட்டாரத்தில் காய்கறி கமிஷன் கடைகள் அமைக்க வேண்டும். தக்காளி உள்ளிட்ட விளைபொருட்களை சேமித்து வைக்க குளிர்பதன வசதி கொண்ட கிட்டங்கி கடையம் வட்டாரத்தில் அமைக்க வேண்டும்.

சம்பன்குளத்தில் இருந்து வாகைகுளத்துக்கு கால்வாய் வசதி அமைக்க வேண்டும். இதன் மூலம் சுமார் 300 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். காட்டுப் பன்றிகள் விவசாய பயிர்களை கடுமையாக சேதப்படுத்துகின்றன. இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். கடையம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட எந்த விதைகளும் முளைக்கவில்லை. இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

வடகரை பகுதியில் விவசாய பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வரும் யானைகளை காட்டுக்குள் விரட்ட நிரந்தரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண்மைத் துறை, வனத் துறைகளில் மாவட்ட அளவிலான அதிகாரிகளை விரைவில் நியமிக்க வேண்டும்” என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள், புகார்களை கூறினர். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்