தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் அசோசியேஷனை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளில் ஒரு தரப்பினர், புதிய சங்கம் தொடங்கும் நோக்கில் திருச்சியில் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அந்த அசோசியேஷனின் மாநில துணைப் பொதுச் செயலாளராக இருந்த ஜி.ஆர்.தர், திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
தனியார் பள்ளிகளுக்கு ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. அதை அரசுடன் பேசித்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும். நாங்கள் தொழிற்சங்கத்தினர் கிடையாது. எனவே, வீதியில் இறங்கிப் போராடக் கூடாது. அரசுடன் மோதல் போக்கைக் கடைபிடிப்பது, பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுவது, சங்கத்தின் வரவு- செலவு கணக்குகளை சமர்ப்பிக்காதது, தன்னிச்சையாக நிர்வாகிகளை நியமனம் செய்வது என சங்கத் தலைமை (மாநில பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமார்) நடந்து கொள்வதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சங்கப் பொறுப்பாளர்கள் வெளியேறியுள்ளோம்.
தனியார் பள்ளிகள் என்றாலே பணம்தான் என்று மக்கள் மனதில் உள்ள எண்ணத்தை மாற்றி, மிகச் சிறந்த கல்விச் சேவையை தனியார் பள்ளிகள் கொடுத்துக் கொண்டிருக்கின்றன என்பதை மக்கள் மனதில் பதிய வைப்பதற்காக புதிய சங்கத்தைத் தொடங்கவுள்ளோம். சங்கத் தொடக்க விழா பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.
செய்தியாளர் சந்திப்பின்போது மாநில பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் நிர்மலா க.சந்திரசேகரன் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளித் தாளாளர்கள் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago