பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரேநாளில் 4 அடி உயர்வு தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும் பிறஇடங்களிலும் மழை நீடிக்கிறது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 4 அடி உயர்ந்திருந்தது.

பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் காலையில் 117.20 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 4,184 தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 321 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. அணை நீர்மட்டம் 4 அடி உயர்ந்து நேற்று காலையில் 121.90 அடியாக இருந்தது. சேர்வலாறு நீர்மட்டம் 135.69 அடியிலிருந்து 140.68 அடியாகவும், மணிமுத்தாறு நீர்மட்டம்89.50 அடியிலிருந்து 2 அடி உயர்ந்து 91.60 அடியாகவும் இருந்தது. வடக்குபச்சையாறு நீர்மட்டம் 15 அடியாகவும், நம்பியாறு நீர்மட்டம் 9.97 அடியாகவும், கொடுமுடியாறு நீர்மட்டம் 36.50 அடியாகவும் இருந்தது. தொடர் மழையால் சேர்வலாறு அணை இன்னும் ஓரிரு நாட்களில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரள்கிறது.

மாவட்டத்தில் அணைப் பகுதிகளிலும் பிறபகுதிகளிலும் நேற்று காலை 8 மணிநிலவரப்படி பெய்த மழையளவு (மி.மீட்டரில்):

பாபநாசம்- 21, மணிமுத்தாறு- 4, சேர்வலாறு- 9, அம்பாசமுத்திரம்- 15.4, சேரன்மகாதேவி- 11, ராதாபுரம்- 30, நாங்குநேரி- 20, நம்பியாறு- 25, களக்காடு- 14.2, மூலைக்கரைப்பட்டி- 30, பாளையங்கோட்டை- 72, திருநெல்வேலி- 15.

ராமநதி அணை நிரம்பியது

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக கடனாநதி அணையில் 45 மிமீ மழை பதிவானது. குண்டாறு அணையில் 43, சங்கரன்கோவிலில் 36, செங்கோட்டையில் 31, சிவகிரியில் 26, ராமநதி அணையில் 15, கருப்பாநதி அணை மற்றும் அடவிநயினார் அணையில் தலா 13, ஆய்க்குடியில் 10.60, தென்காசியில் 8.60 மிமீ மழை பதிவானது.

தொடர் மழையால் கடனாநதி அணை, கருப்பாநதி அணை, குண்டாறு அணைகள் ஏற்கெனவே நிரம்பிவிட்டன. 84 அடி உயரம் உள்ள ராமநதி அணையும் நிரம்பியது. பாதுகாப்பு கருதி அணை நீர்மட்டம் 82 அடியில் நிலை நிறுத்தப்பட்டு, உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

அடவிநயினார் அணை நீர்மட்டம் 104 அடியாக இருந்தது. 92 கனஅடி நீர் வந்தது. 30 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்