ஜல்ஜீவன் மிஷன் திட்டத்துக்கு ரூ.118 கோடி ஒதுக்கீடு அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

By செய்திப்பிரிவு

ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க ஈரோடு மாவட்டத்திற்கு ரூ.118 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபி சட்டப்பேரவைத் தொகுதியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 164 கிராமங்களில், 18 ஆயிரத்து 691 வீடுகளுக்கு ரூ.21.76 கோடி மதிப்பீட்டில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படவுள்ளன. இதில், எட்டு ஊராட்சிப் பகுதிகளில் ரூ.13.07 கோடி மதிப்பீட்டில், 9 ஆயிரத்து 816 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணிகளுக்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. இப்பணிகளைத் தொடங்கி வைத்தும், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.118 கோடி ஒதுக்கப்பட்டு வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் கீரிப்பள்ளம் ஓடையில் கான்கிரீட் தளம் அமைத்து, தண்ணீர் கொண்டு வந்து விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்திராநகர் காலனி முதல் கீரிப்பள்ளம் ஓடை வரை 700 மீட்டர் நீளத்திற்கு ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைக்கப்படவுள்ளது.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு புதிய காப்பீடு திட்டத்தை செயல்படுத்த கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இத்திட்டம் மூலம் குடும்ப தலைவராக நியமிக்கப்படும் நபரின் பெயரில் காப்பீட்டு பத்திரம் வழங்கப்படும். குடும்ப தலைவர் எதிர்பாராதவிதமாக விபத்துகளில் இறக்கும் பொழுது, காப்பீட்டு பத்திரத்தில் பதியப்படும் வாரிசுதாரருக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும். இத்திட்டத்தை அடுத்த ஆண்டு ஜனவரி இறுதிக்குள் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விளாங்கோம்பை மலைக்கிராமத்திற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன, என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மு.பாலகணேஷ், கோபி ஆர்டிஓ ஜெயராமன், வட்டாட்சியர் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்