திருச்சி மாவட்டத்தில் 12 இடங் களில் கல் குவாரிகள் நடத்த நேற்று ஏலம் நடைபெற்ற நிலையில், 2 குவாரிகள் மட்டுமே ஏலம் போனது. அரசின் விதிமுறைகள், நடைமுறை சிக்கல்களால் பலர் ஏலம் எடுக்கவில்லை என ஏலதாரர்கள் தெரிவித்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சாம்பட்டியில் 3 இடங்கள், புத்தாநத்தம், புதுவாடி, லால்குடி வட்டத்தில் நெய்குளம், ஊட்டத் தூர், முசிறி வட்டத்தில் கரட்டாம் பட்டி, துறையூர் வட்டத்தில் கொட்டையூர், தொட்டியம் வட்டத்தில் அப்பணநல்லூர், நத்தம், எம்.புத்தூர் ஆகிய 12 இடங்களில் ஏற்கெனவே கல் உடைக்கப்பட்ட மற்றும் இதுவரை கல் உடைக்கப்படாத குவாரிகளுக்கான (5 ஆண்டுகள்) ஏலம், மாவட்ட ஆட்சியர் அலுவலக பழைய வளாகத்தில் உள்ள வருவாய் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது.
துணை ஆட்சியரும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளருமான ச.ஜெயப்பிரித்தா தலைமை வகித்தார். கனிமவளத் துறை உதவி இயக்குநர் டி.அண் ணாதுரை முன்னிலை வகித்தார்.
12 குவாரிகளில் லால்குடி வட்டம் நெய்குளம் மற்றும் துறையூர் வட்டம் கரட்டாம்பட்டி ஆகிய 2 குவாரிகள் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்பட்டன. லால்குடி வட்டம் ஊட்டத்தூருக்கான ஏலம் நடந்தபோது, தங்கள் கிராமத்தில் குவாரி அமைக்க ஏலம் விடக் கூடாது என அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அந்த குவாரிக்கான ஏலம் நடைபெறவில்லை.
இதுகுறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன் கூறும்போது, ‘‘எங்கள் கிராமத்தில் ஏற்கெனவே 5 குவாரிகள் உள்ள நிலையில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த குவாரியை ஏலம் விடக் கூடாது என கிராம சபைக் கூட்டத்தில் ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது’’ என்றார்.
மற்ற குவாரிகள் ஏலம் போகாதது குறித்து ஏலம் எடுக்க வந்தவர்களிடம் கேட்டபோது, “குவாரி நடத்துவதில் உள்ள அரசின் விதிமுறைகள், நடைமுறை சிக்கல்கள் என அனைத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லையெனில், பெரிய இழப் பைச் சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, பலரும் ஏலம் எடுக்க வில்லை’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago