தொட்டியம் அருகே முள்ளிப்பாடியில் 16 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஏரி படையலிட்டு, தண்ணீரில் மலர் தூவி மக்கள் வழிபாடு

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே முள்ளிப்பாடியில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஏரி நிரம்பி வழிந்ததால் கிராம மக்கள் படையலிட்டு நேற்று வழிபாடு நடத்தினர்.

தொட்டியம் அருகிலுள்ள முள்ளிப்பாடியில் 320 ஏக்கர் பரப்பளவு கொண்ட முள்ளிப்பாடி ஏரி உள்ளது. இந்த ஏரி நீரைப் பயன்படுத்தி சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 1,500 ஏக்கர் பாசன வசதி பெறும். காவிரி கிளை ஆறுகள் மூலம் ஏரியில் நிரம்பும் தண்ணீர் மூலம் இப்பகுதியில் சாகுபடி நடைபெற்று வருகிறது.

முள்ளிப்பாடி ஊராட்சிமன்றத் தலைவர் செல்லக்கண்ணு மற்றும் கிராம மக்கள் வரத்து வாய்க்கால்களை தூர்வாரியதன் பலனாக இந்த ஆண்டு அதிக அளவில் காவிரியிலிருந்து ஏரிக்கு நீர் வந்தது. மேலும் தற்போது பெய்த மழையால் இந்த ஏரி 16 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி வழியத் தொடங்கியுள்ளது.

இதைக் கொண்டாடும் வகையில் கிராம மக்கள் ஏரியிலி ருந்து நீர் வழியும் பகுதியில் தலைவாழை இலையில், பூ, மஞ்சள், பழம், தேங்காய் உள்ளிட்ட பொருட்களை படையலிட்டு, தீபாராதனை செய்து வழிபாடு நடத்தினர்.

மேலும், வழிந்தோடும் நீரை வரவேற்கும் வகையில், மலர்களை தூவி தங்களது மகிழ்ச்சியை கிராம மக்கள் வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்வில் முள்ளிப் பாடியைச் சேர்ந்த ஊராட்சிமன்றத் தலைவர் செல்லக்கண்ணு, சமூக ஆர்வலர் பன்னீர்செல்வம் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்